Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் திருக்குறள் 25 அதிகாரங்கள் (அனைத்தும்)

TNPSC பொதுத்தமிழ் - பகுதி ஆ - இலக்கியம்


திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட 25 அதிகாரங்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

திருக்குறள்

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

நூல் குறிப்பு:

* திரு + குறள் = திருக்குறள்.

* திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்

* உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்

* இதனை இயற்றியவர் திருவள்ளுவர்

* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.

* திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.

குறள்கள், அதிகாரங்கள் மற்றும் இயல்கள்

* திருக்குறளில் 133 அதிகாரங்களும்,

*அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.

அதிகாரங்கள்133
குறட்பாக்கள்1330
பாவகைவெண்பா

* திருக்குறள் மூன்று பால்களை உடையது

1. அறத்துப்பால்38 அதிகாரங்கள்
2. பொருட்பால்70 அதிகாரங்கள்
3. காமத்துப்பால் (இன்பத்துப்பால்)25 அதிகாரங்கள்

அறத்துப்பால் பொருட்பால்பொருட்பால்
பாயிரவியல்
(அதிகாரங்கள் - 04)
அரசு இயல்
(அதிகாரங்கள் - 25)
களவியல்
(அதிகாரங்கள் - 07)
இல்லறவியல்
(அதிகாரங்கள் - 20)
அமைச்சு இயல்
(அதிகாரங்கள் - 32)
கற்பியல்
(அதிகாரங்கள் - 18)
துறவறவியல்
(அதிகாரங்கள் - 13)
ஒழிப்பியல்
(அதிகாரங்கள் - 13)
ஊழியல்
(அதிகாரங்கள் - 01)

* பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

* இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

*‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.

*மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

திருக்குறளின் சிறப்புப்பெயர்கள்

* முப்பால்
* பொய்யாமொழி
* உலக பொதுமறை
* வாயுறை வாழ்த்து
* தமிழ்மறை
* திருவள்ளுவம்
* உத்தரவேதம்
* தெய்வநூல்

திருவள்ளுவர்

TNPSC Thirukkural

ஆசிரியர் குறிப்பு:

* திருவள்ளுவர் வாழ்ந்த காலம் : கி.மு 31
* திருவள்ளுவர் ஆண்டு :
கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.
*உதாரணமாக 2020 +31 = 2051

திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள் :

* செந்நாப்போதார்
* நாயனார்
* தெய்வப் புலவர்
* முதற்பாவலர்
* மாதானு பங்கி
* பொய்யில் புலவர்
* பெருநாவலர்

* இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.

*உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

*இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

*‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

*திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

*திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.

*ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.

*அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.(1+3+3)

*மொத்த குறட்பாக்கள் 1330 இதன் கூட்டுத் தொகையும் ஏழு.(1+3+3+0)

* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.

வள்ளுவர் கூறிய உடைமைகள் :

  1. அன்புடைமை
  2. அடக்கமுடைமை
  3. ஒழுக்கமுடைமை
  4. பொறையுடைமை
  5. அருளுடைமை
  6. அறிவுடைமை
  7. ஊக்கமுடைமை
  8. ஆள்வினையுடைமை
  9. பண்புடைமை
  10. நாணுடைமை

ஒரே எழுத்தில் முடியும் குறள்:

 "தொடிற்கடின் அல்லது காமநோய் போல  
விடிற்கடின் ஆற்றுமோ தீ" 


பகா எண்களை குறிப்பிடும் குறள்:

"ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து"
பகா எண்கள் : 1, 5, 7


மூன்று நீமங்கள் இடம் பெற்றுள்ள குறள் :

"பாலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி 
வாலெயி றூறிய நீர்"
மூன்று நீர்மங்கள் : பால், தேன், நீர்


துணை எழுத்தே இல்லாத குறள் :

"கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக".(391)


ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ள குறள்:

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு"
* ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும்,
*ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும்,
*ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளின் சிறப்புகள்:

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறள் கரத்தில் தொடங்கிகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-வீ,ங

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

* திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன .

* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல்

* குறிப்பறிதல - (பொருட்பால் - அதிகாரம் 71)

* குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

* திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)

* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

* எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

* ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.

* விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.

* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

* திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

* 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் (மீன்), மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

சிறந்த உரை :

* பரிமேலழகர்
* மு.வரததாசனார்
* மணக்குடவர்

உரைசெய்த பதின்மர்:

* தருமர்
* தாமத்தர்
* பரிதி
* திருமலையர்
* பரிப்பெருமாள்
* மணக்குடவர்
* நச்சர்
* பரிமேலழகர்
* மல்லர்
* காளிங்கர்

பொதுவான குறிப்புகள் :

* தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது - தைத்திங்கள் இரண்டாம் நாள்

* திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)

* அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 4 இயல்கள்

* பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 3 இயல்கள்

* இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 2 இயல்கள்

* வழக்கு என்பதன் பொருள் - வாழ்க்கை நெறி

* என்பு என்பதன் பொருள் - எலும்பு

* திருக்குறளில் உள்ள இயல்கள் - 9

* படிறு என்பதன் பொருள் - வஞ்சம்

* திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

* செம்பொருள் என்பதன் பொருள் - மெய்ப்பொருள்

* நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் - கிட்டு சிரோன்மணி

* ஆர்வலர் என்பதன் பொருள் - அன்புடையவர்

* துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை

* இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்

* திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் - கின்டெர்ஸ்லே

* புரை என்பதன் பொருள் - குற்றம்

* புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது - திருக்குறள்

* திருக்குறளில் பாயிரம் என்னும் இயலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது - நான்கு

* தமிழ்நாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது - கன்னியாகுமரி

திருவள்ளுவமாலை:

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் – கபிலர்
*காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும் சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.

நூல் குறிப்பு:

* திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
* இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
* ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
* திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”. கபிலர்

இருபத்தைந்து (25) அதிகாரங்கள் :

1. அன்புடைமை14.செய்ந்நன்றி அறிதல்
2. பண்புடைமை15. சான்றாமை
3. கல்வி16. பெரியரைத் துணைக்கோடல்
4. கேள்வி17. பொருள் செயல்வகை
5. அறிவு18. வினைத்திட்பம்
6. அடக்கம்19. இனியவை கூறல்
7. ஒழுக்கம்20. ஊக்கமுடைமை
8. பொறையுடைமை 21. ஈகை
9. நட்பு22. தெரிந்து செயல்வகை
10. வாய்மை 23. இன்னா செய்யாமை
11. காலம்24. கூடா நட்பு
12. வலி 25. உழவு
13. ஒப்புரவறிதல்

1.அன்புடைமை

குறிப்பு:
* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: அன்புடைமை.

குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம் :
உள்ளத்தில் இருக்கும் அன்பை யாராலும் தாழ்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவர் துன்பப்படுவதை கண்டால் கண்ணீர் துளி வாயிலாக அன்பு வெளிப்பட்டு விடும்.


குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம் :
அன்பில்லாத மனதை உடையவர் எல்லாமே தனக்கு என்று நினைத்து வாழ்வார், அன்புடையவரோ தம் உடல், பொருள் அனைத்தும் மற்றவர்களுக்கு உரியது என்று எண்ணி வாழ்வார்கள்.


குறள் 73:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம் :
உயிரும், உடலும் போல் அன்பும், செயலும் இணைத்திருப்பதே உயர்ந்த பொருத்தம் ஆகும்.


குறள் 74:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்று எனும் பண்பை உருவாக்கும், அந்த பண்பு நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.


குறள் 75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்:
இந்த உலகத்தில் இன்புற்று வாழ்பவர்களுக்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக வாழ்வதனாலே என்று சொல்லலாம்.


குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:
நல்ல செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று உரைப்பவர்கள், வீர செயல்களுக்கும் அன்பு துணையாக இருக்கிறது என்பதை அறியாதவர்கள்.


குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்:
எலும்பில்லாத உடம்போடு வாழும் புழு, பூச்சிகளை வெயில் வாட்டுவது போல, அறம் எதுவென தெரிந்தும் அதை கடைப்பிடிக்காத அன்பில்லாதவனை அவனது மனசாட்சியே வாட்டி வதைக்கும்.


குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம்:
நெஞ்சத்தில் அன்பு இல்லாமல் வாழும் மக்களின் வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.


குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம்:
அன்பு எனும் அகஉறுப்பு இல்லாதவர்களுக்கு, புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?


குறள் 80:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நிலை அடைந்த உடம்பாகும், அன்பு மட்டும் இல்லையென்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின் மேல் தோலை போர்த்தியது போன்றது.


2.பண்புடைமை

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: குடியியல்.
* அதிகாரம்: பண்புடைமை.

குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்:
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.


குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்:
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.


குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
விளக்கம்:
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.


குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
விளக்கம்:
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளக்கம்:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.


குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
விளக்கம்:
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.


குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
விளக்கம்:
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.


குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
விளக்கம்:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.


குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
விளக்கம்:
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.


குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
விளக்கம்:
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.


3.கல்வி

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: அரசியல்.
* அதிகாரம்: கல்வி.


குறள் 391 :
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்:
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.


குறள் 392:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
விளக்கம்:
எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.


குறள் 393:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
விளக்கம்:
கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.


குறள் 394:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
விளக்கம்:
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.


குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
விளக்கம்:
பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.


குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
விளக்கம்:
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.


குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
விளக்கம்:
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி? இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது


குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம்:
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.


குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம்:
தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர். இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.


குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம்:
ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.


4.கேள்வி

குறிப்பு:

* பால் :பொருட்பால்.
* இயல் :அரசியல்.
* அதிகாரம் :கேள்வி.


குறள் 411 :
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
விளக்கம் :
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.


குறள் 412:
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
விளக்கம் :
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.


குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
விளக்கம் :
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.


குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
விளக்கம் :
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.


குறள் 415:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
விளக்கம் :
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.


குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
விளக்கம் :
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.


குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
விளக்கம் :
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.


குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
விளக்கம் :
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.


குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
விளக்கம் :
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.


குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
விளக்கம் :
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.


5.அறிவு

குறிப்பு:
பால்: பொருட்பால்.
இயல்: அரசியல்.
அதிகாரம்: அறிவுடைமை.

குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.


குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.


குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.


குறள் 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
விளக்கம்:
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.


குறள் 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
விளக்கம்:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.


குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம்:
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.


குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம்:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.


குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
விளக்கம்:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.


6.அடக்கம்

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: அடக்கமுடைமை.


குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
விளக்கம்:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.


குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
விளக்கம்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.


குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
விளக்கம்:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.


குறள் 124:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.


குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
விளக்கம்:
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.
விளக்கம்:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.


குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.


குறள் 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம்:
தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.


குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
விளக்கம்:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.


குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
விளக்கம்:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.


ஒழுக்கமுடைமை

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: ஒழுக்கமுடைமை.


குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம் :
ஒழுக்கம், ஒருவர்க்கு சிறப்பைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கத்தை, உயிரை விட மேலானதாக போற்றிக் காக்க வேண்டும்.


குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம் :
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து தெளிந்தாலும், ஒழுக்கமே வாழ்க்கையில் துணை என்பது விளங்கும்.


குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம் :
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுகிறவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம் :
பார்ப்பனன் தான் கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால், அவன் பிறப்புக்கு ஏற்ற ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவனது குலமும், வாழ்வும் கெடும்.


குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
விளக்கம் :
பொறாமை குணம் உடையவனிடம் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு என்பதும் இல்லை.


குறள் 136:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம் :
ஒழுக்கம் தவறுதலால் குலத்தாழ்வு உண்டாகும் என அறிந்த மனவலிமை உடைய சான்றோர்கள், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.


குறள் 137:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம் :
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் தவறினால் வேண்டாத பழியை அடைவர்.


குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம் :
நல்லொழுக்கம், வாழ்வின் நன்மைக்கு விதையாக அமையும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.


குறள் 139:
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம் :
தீய சொற்களை தவறியும்கூடத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.


குறள் 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம் :
உலகத்தார் ஏற்றுக் கொண்ட ஒழுக்கப் பண்போடு பொருந்தி வாழக் கற்காதவர்கள், பல நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே ஆவர்.


8.பொறையுடைமை

குறிப்பு:

பால்: அறத்துப்பால்.
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: பொறையுடைமை.


குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம்:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.


குறள் 152:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
விளக்கம்:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.


குறள் 153:
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.


குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
விளக்கம்:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.


குறள் 155:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
விளக்கம்:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.


குறள் 156:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
விளக்கம்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.


குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
விளக்கம்:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.


குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
விளக்கம்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.


குறள் 159:
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
விளக்கம்:
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.


குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
விளக்கம்:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


9.நட்பு

குறிப்பு:

பால்: பொருட்பால்.
இயல்: நட்பியல்.
அதிகாரம்: நட்பு.


குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
விளக்கம்:
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
விளக்கம்:
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
விளக்கம்:
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
விளக்கம்:
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.


குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
விளக்கம்:
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.


குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
விளக்கம்:
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.


குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
விளக்கம்:
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


விளக்கம்:
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.


குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
விளக்கம்:
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.


குறள் 790:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
விளக்கம்:
நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.


10.வாய்மை

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.
* இயல்: துறவறவியல்.
* அதிகாரம்: வாய்மை.


குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம் : பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.


குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம் : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம் : மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.


குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
விளக்கம் : மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.


குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
விளக்கம் : உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.


குறள் 296:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம் : பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.


குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம் : செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.


குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம் : நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.


குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம் : புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம் : வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


11.காலம்

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: அரசியல்.
* அதிகாரம்: காலமறிதல்.


குறள் 481:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம் :
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


குறள் 482:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
விளக்கம் :
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.


குறள் 483:
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
விளக்கம் :
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


குறள் 484:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம் :
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.


குறள் 485:
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
விளக்கம் :
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.


குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்கம் :
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.


குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம் :
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.


குறள் 488:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
விளக்கம் :
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.


குறள் 489:
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
விளக்கம் :
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.


குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
விளக்கம் :
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.


12.வலி

குறிப்பு:
* பால்: பொருட்பால்.
* இயல்: அரசியல்.
* அதிகாரம்: வலியறிதல்.


குறள் 471:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
விளக்கம் :
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.


குறள் 472:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
விளக்கம் :
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.


குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம் :
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.


குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
விளக்கம் :
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.


குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம் :
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.


குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
விளக்கம் :
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.


குறள் 477:
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
விளக்கம் :
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.


குறள் 478:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
விளக்கம் :
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.


குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
விளக்கம் :
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.


குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
விளக்கம் : தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.


13.ஒப்புரவறிதல்

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: ஒப்புரவறிதல்.


குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம் :
மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.


குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம் :
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.


குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
விளக்கம் :
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.


குறள் 214:
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம் :
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.


குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம் :
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
விளக்கம் :
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.


குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
விளக்கம் :
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.


குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம் :
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.


குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
விளக்கம் :
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.


குறள் 220:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம் :
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.


14.செய்நன்றி அறிதல்

குறிப்பு:

* குறள் பால்: அறத்துப்பால்.
* குறள் இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்:
தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.


குறள் 102:
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம்:
காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.


குறள் 103:
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
விளக்கம்:
பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும்விட அளவினால் மிகப் பெரியதாகும்.


குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.
விளக்கம்:
உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.


குறள் 105:
உதவி வரைந்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்:
உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று: அது உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.


குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
விளக்கம்:
மனமாக இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது. துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.


குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.


குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்:
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.


குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
விளக்கம்:
ஒருவர் நம்மைக் கொன்றாற்போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.


குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.


15.சான்றாமை

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: குடியியல்.
* அதிகாரம்: சான்றாண்மை.


குறள் 981:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
விளக்கம்:
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.


குறள் 982:
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
விளக்கம்: நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல.


குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
விளக்கம்: அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.


குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
விளக்கம்: உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.


குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
விளக்கம்: ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.


குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
விளக்கம்:
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.


குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
விளக்கம்:
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.


குறள் 988:
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
விளக்கம்: சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.


குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
விளக்கம்:
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.


குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
விளக்கம்:
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.


16.பெரியரைத் துணைக்கோடல்

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: அரசியல்.
* அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.


குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம்:
அறமுணர்ந்த மூத்த அறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
விளக்கம்:
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.


குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
விளக்கம்:
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.


குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
விளக்கம்:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.


குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
விளக்கம்:
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.


குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
விளக்கம்:
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.


குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
விளக்கம்:
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.


குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
விளக்கம்:
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.


குறள் 449:
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
விளக்கம்:
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.


குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
விளக்கம்:
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.


17.பொருள் செயல்வகை

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: கூழியல்.
* அதிகாரம்: பொருள்செயல்வகை.


குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
விளக்கம்:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.


குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்:
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.


குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்:
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.


குறள் 754:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்:
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.


குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம்:
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.


குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்:
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.


குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்:
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.


குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்:
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.


குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்:
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.


குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
விளக்கம்:
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.


18.வினைத்திட்பம்

குறிப்பு:

* பால்: பொருட்பால்.
* இயல்: அமைச்சியல்.
* அதிகாரம்: வினைத்திட்பம்.


குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.


குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்:
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.


குறள் 663:
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
விளக்கம்:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.


குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.


குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம்:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.


குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.


குறள் 667:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
விளக்கம்:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.


குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
விளக்கம்:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.


குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
விளக்கம்:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

குறள் 670:
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
விளக்கம்:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.


19.இனியவை கூறல்

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.
* இயல்: இல்லறவியல்.
* அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
விளக்கம்:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.


குறள் 92:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.


குறள் 93:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.


குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
விளக்கம்:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.


குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
விளக்கம்:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
விளக்கம்:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.


குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
விளக்கம்:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.


குறள் 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
விளக்கம்:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.


குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
விளக்கம்:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?


குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.


20. ஊக்கமுடைமை

குறிப்பு:
* பால்: பொருட்பால்
* இயல்: அரசியல்
* அதிகாரம்: ஊக்கமுடைமை


குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
விளக்கம்:
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊமில்லாதவர் வேறு எதை பெற்றிருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.


குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.


குறள் 593 :
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
விளக்கம் :
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் (செல்வம் இழந்தபோதும்) அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.


குறள் 594 :
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
விளக்கம் :
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவர்களிடம் போய்ச் சேரும்.


குறள் 595 :
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
விளக்கம் :
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.


குறள் 596 :
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
விளக்கம் :
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.


குறள் 597 :
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
விளக்கம் :
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.


குறள் 598 :
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
விளக்கம் :
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.


குறள் 599 :
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
விளக்கம் :
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


குறள் 600 :
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
விளக்கம் :
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

21. ஈகை

குறிப்பு:
* பால்: அறத்துப்பால்
* இயல்: இல்லறவியல்
* அதிகாரம்: ஈகை


குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து
விளக்கம்:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.


குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
விளக்கம்:
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.


குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
விளக்கம்:
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.


குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
விளக்கம்:
உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும் .


குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
விளக்கம்:
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
விளக்கம்:
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.


குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
விளக்கம்:
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.


குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
விளக்கம்:
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.


குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
விளக்கம்:
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.


குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
விளக்கம்:
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

22. தெரிந்து செயல் வகை

குறிப்பு:
* பால்: பொருட்பால்
* இயல்: அரசியல்
* அதிகாரம்: தெரிந்து செயல் வகை


குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
விளக்கம்:
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.


குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும் பொருள் யாதொன்று மில்.
விளக்கம்:
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.


குறள் 463:
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.
விளக்கம்:
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.


குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
விளக்கம்:
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.


குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
விளக்கம்:
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.


குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
விளக்கம்:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.


குறள் 467:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
விளக்கம்:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.


குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
விளக்கம்:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.


குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
விளக்கம்:
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.


குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
விளக்கம்:
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.


23. இன்னா செய்யாமை

குறிப்பு:
* பால்: அறத்துப்பால்
* இயல்: துறவறவியல்
* அதிகாரம்: இன்னா செய்யாமை


குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.


குறள் 312:
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.


குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
விளக்கம்:
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.


குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
விளக்கம்:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.


குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
விளக்கம்:
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.


குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
விளக்கம்:
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.


குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
விளக்கம்:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.


குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
விளக்கம்:
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.


குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
விளக்கம்:
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.


குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
விளக்கம்:
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.


24. கூடாநட்பு

குறிப்பு:
* பால்: பொருட்பால்
* இயல்: நட்பியல்
* அதிகாரம்: கூடாநட்பு


குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
விளக்கம்:
உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரின் நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.


குறள் 822:
இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
விளக்கம்:
நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.


குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
விளக்கம்:
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.


குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
விளக்கம்:
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.


குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
விளக்கம்:
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.


குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
விளக்கம்:
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.


குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
விளக்கம்:
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.


குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
விளக்கம்:
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.


குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
விளக்கம்:
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


குறள் 830:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
விளக்கம்:
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.


25. உழவு

குறிப்பு:
* பால்: பொருட்பால்
* இயல்: குடியியல்
* அதிகாரம்: உழவு


குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
விளக்கம்:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.


குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
விளக்கம்:
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.


குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
விளக்கம்:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.


குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
விளக்கம்:
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.


குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
விளக்கம்:
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.


குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
விளக்கம்:
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.


குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
விளக்கம்:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.


குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
விளக்கம்:
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.


குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
விளக்கம்:
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.


குறள் 1040:
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
விளக்கம்:
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.


Share with Friends