Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம்

ஆலய வழிபாடு செய்யும் முறை

* கோயிலின் பக்கத்திற் சென்றதும் கைகால்களைக் கழுவிக் கொண்டு கோபுரத்தின் முன்சென்று, நின்று இரண்டு கரங்களையும் தலைமேற்குவித்து மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டும், தோத்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டும், வேறு விசாரங்கள் ஒன்றுமில்லாமல் கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், கடவுள் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குள் போக வேண்டும்.

* கொடிமரத்தின் பக்கத்திற் சென்றதும் புருடர்கள் தலை, செவியிரண்டு, கையிரண்டு, புஜங்களிரண்டு, மோவாய்க் கட்டை ஆகிய எட்டு அவயவங்களும் பூமியிற்படும்படி வணங்கல் வேண்டும். இது அட்டாங்க வணக்கம் என்று கூறப்படும்.

* பெண்கள் தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு ஆகிய ஐந்து அவயங்களும் பூமியிற்படும்படி வணங்கல் வேண்டும். இதனைப் பஞ்சாங்க வணக்கம் என்பர். மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பிரகாரங்களை வலம்வரல் வேண்டும்.

* பிரகாரங்களை வலம் வந்து, பலிபீடத்தின் அருகிற் சென்று, நம்மிடம் உள்ள காமம், குரோத, லோப, மோக, மத, மாற்சரிங்களைப் பலி கொடுக்க உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* பின் கன்னிமூளையில் உள்ள விநாயகர் சந்நதியில் சென்று வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக்கையால் வலப்புறத்திலும் மண்டையில் மூன்று முறை குட்டுகளிட்டு, வலக்கையால் இடக்காதையும், இடக்கையால் வலக்காதையும் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புகரணமிட்டு, விநாயகர் தோத்திரம் கூறி வணங்கல் வேண்டும்.

* விநாயகரை வணங்கிய பிறகு துவாரபாலக விக்கிரகங்கள் முன் சென்று, "அடியேன் இறைவனை வணங்குவதற்கு அனுமதி செய்தருளும்" என்று வேண்டிக் கொண்டு சந்நிதியிற் சென்று, இறைவனை வணங்கித் தோத்திரப்பாக்கள் கூறல் வேண்டும்.

* தேங்காய், பழம் முதலிய நிவேதனப் பொருள்களை கொடுத்து நிவேதிக்கச் செய்யலாம்.

* கற்பூரதரிசனம் செய்து, திருநீறு பெற்றுக் கொண்டு, மூலஸ்தான மூர்த்தியை நன்றாய் மனதில் பதியவைத்து துதித்து வெளிவரல் வேண்டும். அம்பிகை சந்நிதியிலும் இவ்வாறே செய்தல் வேண்டும்.

* உட்பிரகாரங்களில் - இருக்கும் ஒவ்வொரு மூர்த்தியையும் வணங்கிக் கொண்டே வலம் வரல் வேண்டும். தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தின் முன்னர் சென்று அவரை குருவாகப் பாவித்து வணங்கல் வேண்டும்.

* பின்னர் முருகப்பெருமானிடம் சென்று வணங்கித் தோத்தரித்து சண்டேசுரர் சந்நதியை அடைந்து, சிவத்தியானத்தில் இருக்கும் இவரிடம் மூன்றுமுறை கையால் கொட்டி, அவர் நம்மைப் பார்ப்பதாகக் கருதிச் சிவதரிசன பலனைத் தருமாறு பிரார்த்திக்க வேண்டும். கையைத் தட்டுவதனால் உண்டாகும் ஒலி அவருக்குப் பிரீதி அளிப்பதால் அவரை ஒலிச்சண்டேசுவரர் எனவும் கூறுவர்.

* பின்னர் நவக்கிரகங்கள் முதலியவைகளை வணங்க வேண்டும்.

* கோள்கள் மனிதர்களுக்குச் செய்யும் தீமைகளைக் குறைப்பதற்காக நவக்கிரக ஆராதனை வணக்கமும், சனீசுவர பகவானே! உனைத் தொழுவேன் எனைத் தொடாதே" என வேண்டித் தீவினை நம்மை, அணுகாதிருக்கவும் நவக்கிரக சனீசுவர ஆராதனை கோவில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* விஷ்ணு ஆலயங்களில் இறைவன் திருமுன்பு வீற்றிருக்கும் பெரிய திருவடியாகிய கருடாழ்வாரை வணங்கி உட்சென்று மூலஸ்தான மூர்த்தியின் முன்நின்று திவ்வியப் பிரபந்தப் பாடல்களைப் பாடித் துதித்துத் துளசியும், தீர்த்தமும் பெற்று, சடாரி சாத்தப்பெற்று, மூர்த்தியைத் தியானித்துத் தாயார் சந்திதானத்துக்கும் சென்று அங்குத் தாயாரைச் சேவித்துக் கொண்டு வலம் வரும்பொழுது உட்பிராகாரத்தில் காணப்படும் மூர்த்திகளை வணங்கி வெளியே வரல் வேண்டும்.

* இந்தவிதமாக ஆலய தரிசனம் உள்ளே முடிந்த பிறகு கொடி மரத்திற்குச் சற்று துாரம் விலகியிருந்து உள்ளேயுள்ள மூர்த்தியின் மூலமந்திரத்தை (சிவத்தியானத்துக்குரியது "ஓம் நமசிவாய" விஷ்ணுத் தியானத்துக்குரியது "ஹரி ஓம் நமோ நாராயணாய )

* நுாற்றெட்டு முறைக்குக் குறையாமல் ஜபித்து மூர்த்தியை தியானித்துக்கொண்டு மௌனமாக வீட்டிற்கு வரல் வேண்டும்.

தலங்களும் திவ்விய தேசங்களும்:
* ஆலயங்களில் சைவசமய குரவர்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஆலயங்கள் மிகச்சிறப்புடையன.

* தேவாரப்பாடல்களைப் பெற்ற ஆலயங்கள் ”தலங்கள்" என்றும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களைப் பெற்ற ஆலயங்கள் "திவ்விய தேசம்” என்றும் பெயர்பெறும்.

* ஆழ்வார்கள் பாடல்களை ”மங்களா சாசனம்" எனச் சிறப்பித்துக் கூறுவர்.

* சமயாச்சாரியர்களால் பாடல் பெற்ற தலங்கள் இருநுாற்று எழுபத்து நான்காகும். அவை
சோழ நாடு - 190
தொண்டை நாடு - 32
நடு நாடு - 22
பாண்டி நாடு - 14
மலை நாடு - 1
துளுவம் - 1
கொங்கு நாடு - 7
ஈழநாடு - 2
வட நாடு - 5
ஆக தலங்கள் - 274

* ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகள் நூற்றெட்டாகும். விவரம்
சோழ நாடு - 40
பாண்டி நாடு - 18
மலை நாடு - 13
நடு நாடு - 2
தொண்டை நாடு - 22
வட நாடு - 12
பரமபதம் - 1
ஆக திருப்பதிகள் - 108

இதரச் சிறப்புப்பெற்ற தலங்கள் :
* அட்டவீரட்டங்கள் சிவபிரான் புரிந்த எட்டு வீரச்செயல்களை தன்னகத்தே கொண்ட தலங்களை ”அட்டவீரட்டங்கள்" என்பர்.

அட்டவீரட்டங்கள்:
* திருக்கண்டியூர் ,
* திருக்கோவலூர்,
* திருவதிகை,
* திருப்பறியலுார்,
* திருவிற்குடி,
* திருவழுவூர்
* திருக்குறுக்கை
* திருக்கடவூர்

சில மூர்த்தி விசேட தலங்கள்:
* விநாயகர் - வலஞ்சுழி,
* திருகுமரன் - திருவேரகம்,
* தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி,
* சண்டேசர் - சேய்ஞலுார்,
* நந்தி - திருவாவடுதுறை,
* வடுகன் (வைரவர்) - சீர்காழி,
* சபாபதி - தில்லை ,
* தியாகராஜர் - திருவாரூர்.

காசிக்குச் சமமான தலங்கள்:
* திருவெண்காடு ,
* திருவையாறு,
* திருமயிலாடுதுறை (மாயூரம்),
* திருவிடைமருதுார்,
* திருச்சாய்க்காடு,
* திருமுதுகுன்றம் (விருத்தாசலம்),
* திருவாஞ்சியம்.

நவ திருப்பதிகள்:
1. ஸ்ரீவைகுண்டம்,
2. ஆழ்வார்திருநகரி,
3. தென்திருப்பேரை,
4. தொலைவில்லிமங்கலம்,
5. திருக்குளத்தை,
6. புளிங்குடி,
7. திருக்கோளூர்,
8. வரகுணமங்கை

Share with Friends