கோயிற்கலை (சிற்பங்களை பராமரித்தல்)
விக்கிரங்கள் :
* ஆலயங்களில் நிலைநிறுவப் பெற்றிருக்கும் திருவுருவங்களுக்கு விக்கிரகம் என்று பெயர்.
* அரசர்கள், ஜனநாயகத் தலைவர்கள் முதலியோரது பிறந்த நாள் முதலிய விசேஷ விழாக்களில் அவர்களது திருவுருவப் படங்களை வைத்து கொண்டாடி வருகிறோம்.
* நமது தாய் தந்தையர்களை நினைத்து மகிழவும் அவ்வுருவப் படங்கள் உதவுகின்றன.
* உண்மைக் காதலர்கள் ஒருவர் படத்தை மற்றொருவர் பார்த்து மகிழ்கின்றனர்.
* இந்நாகரீக காலத்திலும் பெரியோர்களுக்கு படத்திறப்பு விழாக்களும் உருவச் சிலை நாட்டுதலும் ஏராளமாக நடைபெற்று வருகின்றன.
.
* இவையனைத்தும் தங்களின் மதிப்புக்குரிய பெரியவர்கள் பால் இவர்கள் வைத்த பேரன்பினை நன்கு விளக்குகின்றது.
* இவற்றை யாரும் குறை கூறுதற்கில்லை. அதைப்போல இறைவனிடம் பேரன்புகொண்ட அடியவர்கள் இறைவனது திருவுருவத்தைப் படங்களிலும், ஆலய விக்கிரகங்களிலும் வணங்கி வருகின்றனர்.
* ஒரு பெரியவரின் உருவப்படத்தை ஒருவன் எவ்வகையிலேனும் இழிவுபடுத்தினால் அப்பெரியோரிடம் பேரன்பு கொண்டோர் அதனை பொறுக்க மாட்டார்கள். அதைப்போல ஆலய விக்கிரகங்களை இழிவுபடுத்தவதையும் இறைவன் அடியார்கள் பொறுக்கமாட்டார்கள். இறைவனை நேரில் கண்ட பெரியோர்கள் நமது இந்து மதத்தில் பலர் உண்டு, அவர்கள் இறைவனைக் கண்டவிதத்தை, அவனது அங்க அடையாளங்களை தமது தெய்வீகப் பாடல்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.
திருநாவுக்கரசர்:
"பாவின் மொழியாள் ஓர்பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றிநுதல் கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே"
என்று தம் பிரம்மனை கண்டவிதத்தைப் பாடலின் கண் நிரூபிக்கின்றார்.
பேயாழ்வார் :
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டென் புரிசங்கங் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று"
என்று தாம் திருமாலினை கண்ட வண்ணத்தை கவினுறப் பாடுகிறார்.
* இவர்களது காவியத்திலிருந்து இத்திருவுருவங்களின் உண்மை ஓவியம் நமக்கு நன்கு விளங்குகின்றது.
* விக்கிரகங்களில் சில சுயம்புவாகவே முளைத்தவையும் உண்டு.
* தேவர்கள், ரிஷிகள் முதலியவர்களாலும் பிரதிஷ்டிக்கப்பட்டவையும் உள்ளன.
* பூஜையின் பொருட்டு எங்கும் நிறைந்து விளங்கும் கடவுளை மூலமந்திரங்கள் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆகமம் உணர்ந்த ஞானிகள் ஆவாகனம் செய்கின்றார்கள்.
* அதன் பின் தயாநிதியே அடியேனை அனுக்கிரகிப்பதற்காக இவ்விக்ரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று அன்புடன் யாசித்து ஸ்தாபனம் செய்கிறார்கள்.
* இதனை அலையாது அழுந்த நிலைபெறல் தாபனம் என்பதால் அறியலாம்.
* அதன்பின் பலவகை பூஜைகளாலும், நைவேத்தியங்களாலும் நித்திய நைமித்தக ஆராதனைகளாலும், கடவுள் சக்தியை அங்கே நிலைநிறுத்தி, வழிபடுவோர் அதிலிருந்து பயன்பெறும்படி செய்துள்ளார்கள்.
* ஆலய விக்கிரகத்தை வைணவர் அர்ச்சை எனக் கூறுவர்.
* சூரியன் முன் சிறிது பஞ்சைக் காட்டினால், பஞ்சில் தீப்பிடிப்பதில்லை . சூரியனுக்கும், பஞ்சுக்கும் இடையில் ஒரு சூரிய காந்தக் கண்ணாடியைக் காட்டினால் அது சூரிய கிரணத்தை அதிகமாக இழுத்து வெகு சீக்கிரமாக பஞ்சில் தீப்பற்றி எரியும்படி செய்கிறது.
* அதுபோல, பஞ்சாகிய நமது உள்ளத்தில் இறைவனது அருளாகிய தீ வெகு துரிதமாகப் பற்றுவதற்குக் கண்ணாடியாகிய விக்கிரகம் மிக உதவுகின்றன.
* பசுவின் உடலெங்கும் வியாபித்திருக்கும் பால். அதன் மடிவழியாகச் சுரப்பது போல பரந்து கிடக்கும் ஆண்டவனது அருள், விக்கிரக வழியாக நமக்கு கிடைக்கின்றது.
* கடவுள் பாலில் நெய் போல எங்கும் வியாபித்திருப்பினும் விக்கிரகங்கிளல் தயிரில் நெய்போல விளங்குகின்றார்.
* கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே எனக் கூறியதன் கருத்து, கல் செம்பு முதலியவற்றில் மாத்திரம் அல்ல கடவுள் இருப்பது எங்கும் நிறைந்து விளங்குகின்றார் என்பதை விளக்குவதற்கேயாம்.