Easy Tutorial
For Competitive Exams

Science QA INM - சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர். Notes -தலைவர்கள் - இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்

தலைவர்கள் - இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்

  • இந்தியாவின் விடுதலைக்காகத் தமிழகத்தில் பல தலைவர்கள் அரும்பாடுபட்டனர்.
  • அவர்களுள் வ.உ.சி., சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராசர், தந்தை பெரியார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

  • வ.உ.சி. (1872-1936)

    • வ.உ.சி என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் 1872ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 5ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டார்.
    • 1906ஆம் ஆண்டு வங்கச் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டி, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்.
    • மதுரையில் ஐந்தாம் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் ஒரு லட்சம் ரூபாயை இவர் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தார்.
    • ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை எதிர்த்து, இவர் கப்பல் வாங்கி அதைத் தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே ஓட விட்டார். இதனால் இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர் இவர் ஓட்டிய கப்பலைப் பறிமுதல் செய்தனர்.
    • 1907ஆம் ஆண்டு நடந்த சூரத் மாநாட்டில் அஞ்சா நெஞ்சர் என்று கூறப்படும் திலகர் பெருமானுக்கு உறுதுணையாக வ.உ.சி. விளங்கினார்.
    • ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை. சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை. சிறையில் செக்கிழுத்தார்; கல்லுடைத்தார் (40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உலகின் ஒரே தலைவர் வ.உ.சியின்). இதனால் இவர் செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்பட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் தூத்துக்குடியில் மறைந்தார்.
9583.வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
30
35
40
34
9966.கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A) 1910-ஆம் ஆண்டு வ.உசிதம்பரம் பிள்ளை சுதேசிக்கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A)-வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
(A) உண்மை (R) தவறானவை
(A) தவறானவை (R) உண்மையானவை

சுப்பிரமணிய பாரதியார் (1882-1921)

  • இவருடைய இயற்பெயர் சுப்பையா. இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் எட்டையபுரத்தில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது.
  • நொந்தே போயினும்
  • வெந்தே மாயினும்
  • நம்தேசத்தவர்
  • உவந்தே சொல்வது
  • வந்தே மாதரம்
  • என்பன போன்ற கனல் பறக்கும் கவிதைகளால் தமிழக மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர் பாரதியார். இவர் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரும் வ.உ.சி.யைப் போலச் சூரத் மாநாட்டில் திலகரின் பக்கம் நின்றார். 1921ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 11ஆம் நாள் மறைந்தார்.

சுப்பிரமணிய சிவா (1884-1925)

  • வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரையும் தமிழக விடுதலைப் போராட்டத்தில் மும்மூர்த்திகள் என அழைத்தனர்.
  • சுப்பிரமணிய சிவா திருவனந்தபுரத்தில் மாணவராய் இருந்தபோது, அவரது அரசியல் கொள்கையின் காரணமாக வெளியேற்றப்பட்டார். பின்பு நெல்லை வந்து வ.உ.சி.யுடன் சேர்ந்து விடுதலைக்காகப் போராடியபோது பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • இவர் திலகரின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் உள்ள திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குத் திலகர் கட்டம் என்று பெயர் சூட்டினார்.
  • தருமபுரியில் பாரத மாதா ஆசிரமம் நிறுவினார். விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சேலம் சிறையிலிருந்து வெளிவந்தபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
  • தொழுநோயைக் காரணம் காட்டி இவரைப் புகைவண்டியில் ஏறக் கூடாது என்று 1923-25இல் ஆங்கில அரசாங்கம் தடை விதித்தது. எனவே இவர் கட்டை வண்டியிலும், கால்நடையிலும் சென்று ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கிக் கூறி இந்திய விடுதலைக்காகப் பிரச்சாரம் செய்தார்.

வாஞ்சிநாதன் (1886-1911)

  • வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் வாஞ்சிநாதன் ஆவார். வ.உ.சி.க்குச் சிறைத்தண்டனை வழங்கியவர் திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ்துரை என்பவர் ஆவார். வ.உ.சி.க்குச் சிறைத்தண்டனை வழங்கிய காரணத்தால் இவரைக் கொல்ல வாஞ்சிநாதன் முடிவு செய்தார்.
  • ஆஷ்துரை 1911ஆம் ஆண்டு சூன் திங்கள் 17ஆம் நாள் திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டிப் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார்.
  • புகைவண்டி வழியில் மணியாச்சி நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது வெளியில் நடைமேடையில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன், புகைவண்டியில் இருந்த ஆஷ்துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுப் பின்னர்த் தன்னையும் தானே சுட்டுக்கொன்று வீரமரணம் எய்தினார்.
  • இவருடைய தியாகத்தைச் சிறப்பித்து மணியாச்சி சந்திப்பிற்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களால் பெயர் சூட்டப்பட்டது.

தியாகி விஸ்வநாததாஸ் (1886-1940)

  • திரைப்படம் வராத அந்தக்காலத்தில் மக்களுக்குப் பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கியது மேடை நாடகம் ஆகும். மேடை நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் விடுதலைக் கனலை வளர்த்தவர்கள் பலர்.
  • அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நாடக நடிகர் தியாகி விஸ்வநாததாஸ் ஆவார். இவர் நாடகங்களில் மக்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்கள் பல அமைந்தன.
  • இவர் வெள்ளைக்காரர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுக் கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா என்று பாடிய பாடல் புகழ் பெற்றது.
  • வ.உ.சி. அவர்கள் ஓட்டிய சுதேசிக் கப்பலைக் கதர்க் கப்பல் வருகுதே என்று பாடிய பாடல் தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது. இவர் தம் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வாழ்ந்தார்.

திருப்பூர் குமரன் (1904-1932)

  • இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருப்பூர் என்னும் ஊரில் 4-10-1904இல் பிறந்தார். 1932ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது.
  • அந்நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஒரு மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போராட்டத்தில் திருப்பூர் குமரன் கையில் தேசியக் கொடியை ஏந்தி, மறியல் வீரர்கள் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றார்.
  • அப்போது அவர் காவலர்களால் தாக்கப்பட்டுத் தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் தேசியக்கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.

இராஜாஜி (1878-1972)

  • இராஜாஜி என்று அழைக்கப்படும் இராஜகோபாலாச்சாரியார் 1878ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 9ஆம் நாள் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவர் சட்டக் கல்வி பயின்று சேலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கினார்.
  • சுதேசி இயக்கத்தை நடத்திய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் கம்பெனிக்குப் பங்குகள் சேர்த்துக் கொடுத்தார். தாமும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்.
  • காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, நிறைந்த வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்.
  • பாரதியைக் காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெரியார் காங்கிரசில் சேரத் துணையாக விளங்கினார்.
  • இந்தியத் தேசியக் காங்கிரசின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
  • ரௌலத் சட்டத்திற்கு எதிரான இயக்கம், காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் அறப்போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
  • 1930ஆம் ஆண்டு தண்டியில் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தினார்.
  • அதே நேரத்தில் தமிழ் நாட்டில் இராஜாஜி நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் திருச்சியிலிருந்து நடைப்பயணமாக வேதாரண்யம் சென்று, அங்கே உப்புச் சத்தியாக்கிரகம் நடத்திச் சிறை சென்றார். இவர் 1972ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 25ஆம் நாள் மறைந்தார்.

சத்தியமூர்த்தி (1887-1943)

  • பெருந்தலைவர் காமராசரின் அரசியல் குருவாக விளங்கியவர் சத்தியமூர்த்தி ஆவார். இவர் காங்கிரஸ் அரசியல்வாதியாகவும், இந்திய விடுதலை வீரராகவும் திகழ்ந்தார்.
  • இவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டசபைக்குள் நுழைவதன் மூலமே விடுதலையை விரைந்து பெறமுடியும் என்று நம்பினார். எனவே 1923இல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றார்

காமராசர் (1903-1975)

  • சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானபோது காமராசரைக் கட்சியின் செயலாளர்களில் ஒருவராக நியமித்தார். விருதுநகர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றி அரசியல் அனுபவம் பெற்றார்.
  • நாடு விடுதலை பெறாமல் மணம் முடித்துக்கொள்வதில்லை என்று உறுதி எடுத்து, இறுதி வரை மணம் முடித்துக் கொள்ளாமலேயே வாழ்ந்தவர் காமராசர்.
  • இவர் இந்திய விடுதலைப் போரில் உப்புச் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு (அமராவதி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டார் இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றார்.
  • உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • 1932ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தில் கைதாகி ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1954 ஆண்டு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.

12475.காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
1954
1955
1956
1957
54117.காமராசர் அமராவதி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட காரணம்?
வைக்கம் சத்தியாகிரகம்
ஒத்துழையாமை இயக்கம்
உப்பு சத்தியாக்கிரகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

தந்தை பெரியார் (1879-1973)

  • இவர் சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் ஆவார்; தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் சுயமரியாதை இயக்கமாகிய திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். ஆயினும் இவர் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
  • அப்போது காந்தியடிகளைப் பின்பற்றி இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டார். காந்தியடிகளின் கதராடையைத் தாம் உடுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார்.
  • கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார். வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் நடத்தினார்.
  • கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்னும் இடத்தில் நடந்த அறப்போராட்டத்தை, காந்தியடிகளின் அறவழியில் நடத்தினார். அதனால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தந்தை பெரியார் வைக்கம் வீரர் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டார்.
  • மேலே கூறப்பட்ட தலைவர்களே அல்லாமல் வ.வே.சு.ஐயர், திரு.வி.க., ப.ஜீவானந்தம், கே.பி. சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற பலரும் இந்திய விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டனர்.
9968.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும்:
(i) வ.உ.சி, எட்டயபுரத்தில் பிறந்தார்.
(ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
(iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
(iv) சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
(i), (iii) மற்றும் (iv)
(ii), (iii) மற்றும் (iv)
(i), (ii) மற்றும் (iv)
(i), (ii) (iii)

Share with Friends