UberMEdic சேவை
- கோவிட் - 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார நலப் பணியாளர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை அளிப்பதற்காக தேசிய சுகாதார ஆணையமானது (NHA - National Health Authority) ஊபர் இந்தியாவுடன் இணைந்துள்ளது.
- இந்த வசதியானது "UberMEdic சேவை" என்ற பெயரின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
- NHA என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தலைமை அமைப்பாகும்.
கோரோப்ளு
- பாரத் பயோடெக் என்ற நிறுவனமானது விஸ்கான்சின் மற்றும் மேடிசன் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நச்சுயிரியியல் வல்லுநர்களுடன் இணைந்து கோவிட் - 19 தொற்றிற்காக "கோரோப்ளு" என்ற ஒரு புதிய மருந்தை மேம்படுத்திச் சோதனை செய்து வருகின்றது.
- இந்த மருந்தானது M2SR என்ற மருந்தை முக்கியக் கூறாகக் கொண்டு மேம்படுத்தப்பட இருக்கின்றது.
- M2SR தடுப்பு மருந்தானது காய்ச்சலிற்கு எதிராகப் பயன்படுத்தப் படுகின்றது.
- M2SR என்பது இன்பளூயன்சா வைரஸின் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு பதிப்பாகும்.
- இந்த மருந்தானது நாசி வழியாக செலுத்தப் படுகின்றது.
பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகரிப்பு
- பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசி போடாத நாடுகளில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், பி.சி.ஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, 6 மடங்கு அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஜான்ஸ் ஹாப்கின்ஸின் விஞ்ஞானிகள் நூற்றாண்டு பழமையான பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் இறப்பு விகிதம் 5.8 மடங்கு குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
- பி.சி.ஜி, அல்லது பேசிலஸ் கால்மெட்-குய்ரின், காசநோய்க்கான தடுப்பூசி ஆகும். பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுகிறது.
- இந்த தடுப்பூசி வரலாற்று ரீதியாக இந்தியா போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிறக்கும்போதே போடப்படுகிறது.
- அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஹாலந்து போன்ற பல பணக்கார நாடுகளுக்கு பி.சி.ஜி தடுப்பூசி போடும் பழக்கம் இல்லை.
- ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகளைக் கொண்டிருந்தன. ஆனால் அவை பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டன.
- கொரோனா வைரஸ். தொற்றுநோய் தொடங்கிய சீனாவும் பி.சி.ஜி தடுப்பூசி கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் இது 1976 க்கு முன்னர் சரியாகப் பின்பற்றப்படவில்லை.
- ஆனால் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடிந்த ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி போடப்படுவது இப்போதும் கட்டாயமாக உள்ளது தெரியவந்துள்ளது.
- பிரிட்டன், நெதர்லாந்து, கிரிஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பை வழங்க முடியுமா என்பதை பரிசோதிப்பதாக 1000க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி கொடுத்து சோதித்து வருகிறார்கள்.
- 178 நாடுகளில் மார்ச் 9 முதல் 24 வரை 15 நாட்களில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், “பி.சி.ஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு மில்லியனுக்கு 38.4 ஆக இருக்கிறது. இந்த தடுப்பூசி போடப்படாத நாடுகளில் ஒரு மில்லியனுக்கு 358.4 ஆக இருந்தது என்பது உண்மை.
- பி.சி.ஜி தடுப்பூசி போடுவதால், நாடுகளில் இறப்பு விகிதம் 4.28 / மில்லியனாக இருந்தது, இதுபோன்ற திட்டம் இல்லாத நாடுகளில் 40 / மில்லியனாகவும் இருக்கிறது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 178 நாடுகளில், 21 நாடுகளில் தடுப்பூசி திட்டம் இல்லை என்றும், 26 நாடுகளின் நிலை தெளிவாக இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
- மேலும் இந்த மருந்தின் நோய்க்கு எதிரான செயல்திறனை சோதிக்க 4,000 நபர்களிடம் மருத்துவ பரிசோதனை தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு
என் காசு
- நாட்டில் முதல் முறையாக, கரூர் வைசியா வங்கியானது கரூரில் முன்பணம் செலுத்தப்பட்ட ஒரு அட்டையான “என் காசு" என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
- இந்திய அரசின் டிஜிட்டல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த வங்கியானது கரூரில் "பணப் புழக்கத்தைக் குறைத்தல்" என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
- இது கரூர் மாவட்டத்தில் பணப் புழக்கத்தின் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கரூரைச் சேர்ந்த கரூர் வைசியா வங்கியானது 104 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டதாகும்.
9 நிமிடத்தில் எவ்வளவு மின் நுகர்வு அளவு குறைந்தது
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி ஞாயிற்றுக்கிழமை, இரவு 9 மணி, 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
- மின்சார விளக்குகள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிகிறது.
- இதோடு, நாட்டின் தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் குறைந்துள்ளது. வடக்கு மண்டலத்தில் 10,413 மெகாவாட், மேற்கு மண்டலத்தில் 8,464 மெகாவாட், கிழக்கு மண்டலத்தில் 6,136 மெகாவாட் அளவுக்கு மின் பயன்பாடு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு 1.7 லட்சம் முழு கவச உடை இலவசமாக அளித்தது சீனா
- இந்தியாவில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் முழு கவச உடைகளை(பிபிஇ) சீனா இலவசமாக அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தவிர உள்நாட்டில் 20 ஆயிரம் முழு கவச உடைகள் வாங்கப்பட்டன.
- இத்துடன் சேர்த்து ஒரு லட்சத்து 90 முழு கவச உடைகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. நம் நாட்டில் ஏற்கனவே 3 லட்சத்து 87 ஆயிரத்து 473 கவச உடைகள் உள்ளன.
- மாநிலங்களுக்கு இதுவரை 2.94 லட்சம் கவச உடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 80 லட்சம் கவச உடைகள் சப்ளை செய்ய சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் முதல் முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையம் அமைப்பு
- கேரளத்தில் கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ளது.
- இதுபோன்றதொரு கட்டமைப்புதான் தென் கொரியாவில் அதிகளவில் மருத்துவப் பரிசோதனை நடத்த பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் வெறும் 2 நிமிடத்தில் ஒருவருக்கு ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பாதுகாப்பு அறை மூலம், பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் ஏற்படாது. இந்த பாதுகாப்பு அறையை அமைக்க ரூ.40 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்கு பக்கமும் மூடப்பட்டு, ஒரு பக்கம் கண்ணாடி சுவரைக் கொடு இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும், கண்ணாடி சுவரில் இரண்டு கையுறைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக மருத்துவப் பணியாளர் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம்.
- ஒவ்வொரு முறை பரிசோதனை நடத்தப்பட்டதும், கையுறைகளும், கேபினும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும்.
- தற்போதைக்கு இரண்டு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் குறுகிய காலத்தில் மேலும் பல பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.