போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication)
தகவல் தொடர்பு (Communication):
* தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்களின் பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியதே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு சமூக பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது கலாசார ஒற்றுமையை அதிகரிக்க உதவுகிறது. தனிநபர் தகவல் தொடர்பு என்பது இரு நபர்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதாகும்.
தனிநபர் தகவல் தொடர்பு:
1. அஞ்சல்2. தந்தி
3. தொலைபேசி
4. கைபேசி
5. பிரதிகள்
1. அஞ்சல் சேவை :
* 1837 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அஞ்சலகச் சட்டத்தின் மூலம் இந்திய அஞ்சல் சேவை இன்று உலகில் மிகப்பெரிய வலைப்பின்னலாக உருவாகியுள்ளது. வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலுள்ள கிராமங்களுக்கும் அஞ்சல் களையும், கட்டுகளையும் அனுப்பப் பயன்படுகிறது. அஞ்சலில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு அஞ்சல் என இருவகைகள் உள்ளன. முதல் வகுப்பு அஞ்சலில் அஞ்சல் அட்டை, உள்நாட்டு அஞ்சல் மற்றும் அஞ்சல் உறைகள் அடங்கும். இரண்டாம் வகுப்பு அஞ்சலில் புத்தகக்கட்டுகள், பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள் மற்றும் பருவ இதழ்கள் (Periodicals ) அடங்கும். இவை அஞ்சல் சேவையில் இரு இடங்களுக்கு இடையில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வான் வழியாகவும் எடுத்து செல்லப்படுகிறது.
* அஞ்சல் மூலமாக பொருள்கள் அனுப்புவதற்கும் (VPP) மின்னணு அனுப்பும் சேவை, உடனடி பணம் அனுப்பும் சேவை, மின்னஞ்சல், மின்னணு கட்டண சேவை, துரிதகட்டுகள் மற்றும் துரித அஞ்சல் நில வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
2. தந்தி :
* தொலைவிடங்களுக்கு எழுத்து மூலம் விரைவாக செய்திகளை அனுப்பும் முறைக்கு தந்தி என்பர். இம்முறையில் அஞ்சல் சேவையைக் காட்டிலும் வெகு விரைவாக செய்திகள் அனுப்பப்படுகின்றன.
3. தொலைபேசி :
* தொலைபேசி என்பது வாய்வழி தகவல் தொடர்பு முறையாகும். வணிக வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் தொலைவில் உள்ளவர்களையும் தொடர்புகொண்டு நேரடியாக பேசமுடியும். உள்நாட்டில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள (STD) எஸ்.டி.டி. வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள ஐ.எஸ்.டி. (TSD)யும் பயன்படுத்தப் படுகின்றன. தொலைபேசி அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒரு சாதனமாகும். ஏனெனில் உடனடியாக தொடர்பு கொள்ள ஏதுவாகிறது.
4. கைபேசி
* இன்றைய வாழ்வில் கைபேசியானது நம்முடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கருவி ஆகும். எங்கு நாம் சென்றாலும் எடுத்துச் செல்லவும் மக்களுடன் தொடர்பு கொள்ளவும் கைபேசி பயனுடையதாக உள்ளது. வெகு தொலைவிலுள்ள கிராமப்பகுதி முதல் மிக உயர்ந்த மலைப்பகுதிகள் வரை இதன் மூலம் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.
* கைபேசியிலிருந்து மற்றொரு கைபேசிக்கு செய்திகளை அனுப்பும் முறைக்கு குறுஞ்செய்தி சேவை (SMS) என்பர். குறுஞ்செய்திகள் ஒரு கைபேசியிலிருந்து மற்றொரு கைபேசிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட புவிப்பகுதிக்குள் உள்ள அனைத்து கைபேசிக்கும் ( Group SMS) அனுப்பலாம்.
5. பிரதி அஞ்சல் (Fax) :
பிரதி அஞ்சல் என்பது ஒரு மின்னணு கருவியாகும். தகவல்கள் எழுதப்பட்டு, அச்சடிக்கப்பட்ட அல்லது கோட்டுப் படங்கள் அல்லது வரை படங்கள் ஆகியவற்றை தொலைபேசி மூலம் உடனடியாக அனுப்பவோ, பெறவோ முடிகிறது. இணையதள பிரதி என்பது, பதிவேடுகளை இணையதள உதவியுடன் அனுப்புவதாகும்.
மக்கள் தொடர்பு சாதனம் :
* மக்கள் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தகவல்களைப் பெறுவதாகும். பல்வேறு தேசியக் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் தகவல் தொடர்பு பயன்படுகிறது - ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
1.வானொலி
2.தொலைக்காட்சி
3. செய்தித்தாள்
4.இணையதளம்
1. வானொலி :
* இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது. 1936ஆம் ஆண்டு அகில இந்தியா வானொலி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1957 முதல் ஆகாசவாணி என்றழைக்கப்படுகிறது. இது சக்தி வாய்ந்த ஊடகமாகக் கருதப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு நல வாழ்வு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குடும்பநலத்திட்டம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பயன்படுகிறது.
2. தொலைக்காட்சி :
இந்தியாவில் தொலைக்காட்சி 'தூர்தர்ஷன்' என அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய வலையமைப் பாகும். தொலைக்காட்சி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம் தேசிய, மண்டல மற்றும் உள்ளூர் என மூன்று வகையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகிறது. நேரடி ஒளிபரப்பின் மூலம் முக்கியமான தேசிய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு எடுத்துச் செல்கிறது. இது பல்வேறு வயதினருக்கும் ஏற்ற வகையில் கேளிக்கை, கல்வி, விளையாட்டு, சுகாதாரக்கேடுகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
3. செய்தித்தாள் :
செய்தித்தாள் எல்லோராலும் பொதுவாக பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாகும். இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி வெளியிடுகிறது. செய்தித்தாள் இந்தியா போன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அறிந்துகொள்ள சக்தி வாய்ந்த கருவியாக பயன்படுத்தப் படுகிறது.
4. இணையதளம் :
* இணையதளம் என்பது கணினிகளின் மிகப்பரந்த வலையமைப்பாகும். இது உலகின் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களையும் இணைக்கிறது. இணையதளம் ஆயிரக்கணக்கான கணினி வலைதளங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலைப்பின்னல் அமைப்பாகும். இது உலகமெங்கிலும் உள்ள கணினி பயன்படுத்துவோர்கள் செய்திகளையும் தகவல்களையும் பல்வேறு விதத்தில் பெறவும், அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது.
* ஆரம்பத்தில் எழுத்துப்பூர்வமான செய்திகளை மின்னணு செய்தியாக (E-mail) அனுப்பவும், பெறவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்சமயம் இது பல்வேறு ஊடகங்களை (Multimedla) அடிப்படையாகக்கொண்டு படங்கள் , பதிமங்கள், காட்சி, குரல் போன்றவற்றின் மூலம் வெளியிடுகிறது. இணையதளத் தின் முக்கிய சேவையாக இருப்பவை
1 மின்னணு அஞ்சல்,
2. உலகளாவிய வலைதளம் (www) மற்றும்
3.இணையதள தொலைபேசி
தகவல் தொடர்பு வலையமைப்பின் பயன்கள் :
* தகவல் தொடர் பின் திறனை மேம்படுத்தியுள்ளது.
* உலகின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களின் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுகிறது.
* வணிகத்தின் பெரும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.
* சமுதாயத்திலுள்ள பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகளை அரசு கையாளுவதற்கு உதவுகிறது.
* மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
* தகவல் யுகத்திற்கான வழியைத் திறந்திருக்கிறது.
* கல்வியை ஒளிபரப்பும் செயற்கைக் கோள் மூலம் கல்வியை மேம்படுத்தி யுள்ளது.
* கடந்த பத்தாண்டுகளில் தகவல் யுகம் அசுர வேகத்தில் பயனளித்துள்ளது. பல்வேறுபட்ட திறன்களைக் கொண்ட ஊடகங்கள் (அச்சு மற்றும் மின்னியல்) மிக வேகமாக வளர்ந்துள்ளன. மேலும் அவைகள் நாட்டின் பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன.