Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் திருக்குறள் ஊக்கமுடைமை

குறிப்பு:
* பால்: பொருட்பால்
* இயல்: அரசியல்
* அதிகாரம்: ஊக்கமுடைமை


குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
விளக்கம்:
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊமில்லாதவர் வேறு எதை பெற்றிருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.


குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.


குறள் 593 :
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
விளக்கம் :
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் (செல்வம் இழந்தபோதும்) அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.


குறள் 594 :
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
விளக்கம் :
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவர்களிடம் போய்ச் சேரும்.


குறள் 595 :
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
விளக்கம் :
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.


குறள் 596 :
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
விளக்கம் :
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.


குறள் 597 :
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
விளக்கம் :
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.


குறள் 598 :
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
விளக்கம் :
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.


குறள் 599 :
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
விளக்கம் :
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


குறள் 600 :
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
விளக்கம் :
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

Share with Friends