குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல் , பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், தொற்று நோய்களைத் தடுத்தல், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்குதல் போன்றவை அரசாங்கத்தின் முக்கிய நலவாழ்வு குறிக்கோள்களாகும்.
குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் பொருட்டு நாடெங்கிலும் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய ஊரக நலவாழ்வுத் திட்டம் எனப்படும் NRHM ( National Rural Health Mission) திட்டப்படி ASHA (Accredited Social Health Activist) தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது.
பிறக்கும் குழந்தைகளுக்கு காச நோய் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு BCG தடுப்பூசி போடுதல், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரண ஜன்னி, ஆகிய மூன்று நோய்களையும் தடுக்க முத்தடுப்பு ஊசி (DPT) போடுதல் போன்ற நடவடிக்கைகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
கருவில் வளரும் சிசு மரணத்தை தடுக்கும் பொருட்டு கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவைப் பெறுவதற்காக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
மலேரியா, டெங்கு போன்ற கொசுவினால் பரவும் நோய்களைத் தடுக்கும் பொருட்டு கொசு மருந்து அடித்தல், சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.