ஆன்மாக்கள்:
* உயிர் நால்வகை தோற்றம், எழுவகைப் பிறப்பு எண்பத்து நான்கு இலட்சம் உருவேற்றுமைகளோடு பிறக்கின்றன.
உயிர்வர்க்கம்:
நால்வகை தோற்றமாவன:
1. அண்டஜம் - முட்டையில் தோன்றுவன - பறவை, ஊர்வன, நீர்வாழ்வன.
2. சுவேதஜம் - வேர்வையில் தோன்றுவன - கிருமி, பேன் முதலியன.
3. உத்பிஜ்ஜம் - வித்து, வேர், கொடி, கொம்பு, கிழங்கு இவற்றில் தோன்றுவன - இவை தாவரங்கள்.
4. சராயுஜம் - கருப்பையில் தோன்றுவன - மனிதரும், விலங்குகளுமாம்
எழுவகைப் பிறப்புகளாவன :
1. தேவர் - பதினொரு இலட்சம் பேதம்
2. மனிதர் - ஒன்பது இலட்சம் பேதம்
3. விலங்கு - பத்து இலட்சம் பேதம்
4. பறவை - பத்து இலட்சம் பேதம்
5. ஊர்வன - பதினைந்து இலட்சம் பேதம்
6. நீர்வாழ்வன - பத்து இலட்சம் பேதம்
7. தாவரம் - பத்தொன்பது இலட்சம் பேதம்
ஆக எண்பத்துநான்கு இலட்சம் பேதங்கள்.
மானுடப் பிறப்பு:
* பிறவிகளில் மானுடராய்ப் பிறத்தலே எல்லாப் பிறவிகளிலும் சிறந்த பிறவியாகும்.
* மனிதர்களைப் போல மிருகங்கள் முதலியனவும் ஐம்புலன்களால் ஆர அமர அமர்ந்து இன்புறுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் மனிதன் அனுபவிக்க முடியாத இன்பங்களை இப்பிராணிகள் அனுபவிக்கின்றன.
* மனிதனால் கேட்க முடியாத ஓசையைக் கேட்பவனவும், மோப்ப முடியாதனவற்றை மோந்தறிவனவும், காண முடியாதவற்றைக் கண்டறியவும் வல்லமையுள்ள பல உயிர்பிராணிகள் உள்ளன.
* ஒற்றுமை, சேமிப்பு, பிள்ளைப்பாசம். முதலிய அருங்குணங்கள் வாய்ந்த உயிர் வகைகளும் உலகில் உள்ளன. விலங்குகளின் கன்றுகள் பிறந்த அன்றே பெற்றதாயிடம் பால் இருக்கும் இடத்தைத் தானே அறிந்து எவ்வித உதவியும் இன்றித்தானே குடித்து மகிழ்கின்றன.
* மனிதக் குழந்தைகளுக்கு இவ்வித ஆற்றல் சற்றும் இல்லை. தமக்குறிய உணவைத் தேடி தானே தெரிந்துகொள்ளும் பிராணிகளின் அறிவும் மனிதக்குழந்தைகளுக்கு இல்லை. இவ்வாறிருக்க மானுடப் பிறப்பு மற்றெல்லாப் பிறப்புகளையும் விடச் சிறந்ததெனக் கூறுவதன் காரணத்தை ஆராய்வோம்.
* மனிதன் என்னும் சொல்லிலுள்ள "மன்" என்பதற்கு நினைப்பவன் என்பது பொருள்.
உடலும் உயிரும்:
* உடம்பை, ஊற்றைச் சடலம் என்றும், அழுக்கென்றும், செடி சேருடலமென்றும், நிரிற்குமிழி என்றும் பலர் பலவாறு இழித்துக் கூறியுள்ளனர்.
கடவுளும் உயிரும்:
* கடவுளின் அருளால் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன, போகங்கள் கிடைக்கின்றன.
தனு:
* தனு என்பது எண்பத்துநான்கு இலட்சம் ஜீவபேதங்களுக்கும் தனித்தனியே கொடுக்கப்படும் உடம்புகளேயாகும்.
கரணம் :
* கரணம் என்பது பூதங்கள் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு ஆகிய இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களும், வித்தியாதத்துவங்கள் ஏழும், சிவதத்துவங்கள் ஐந்தும் ஆக முப்பத்தாறு தத்துவங்களையும் அகக்கருவியாகவும், அறுபது தத்துவங்களை புறக்கருவியாகவும் கொண்டுள்ளது.
புறக்கருவிகள் அறுபதின் விபரம்:
* பிருதிவியின் கூறு - ஐந்து - மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை.
* அப்புவின் கூறு - ஐந்து - நீர் , உதிரம், சுக்கிலம், மூளை , மஜ்ஜை .
* தேயுவின் கூறு - ஐந்து - ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல்.
* வாயுவின் கூறு - ஐந்து - ஓடல், நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல்.
* ஆகாயத்தின் கூறு - ஐந்து - குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
* பிருதிவியின் வழி நாடி - பத்து - இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, ஜீகுவை, அலம்புருடன், சங்கினி, வைரவன், குருதை
* வாயுவின் வழிநாடி - பத்து - பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்சயன்.
* ஆகாயத்தின் வழி ஈஷணாத்திரயம் - மூன்று - அருத்தம், புத்திரன், உலகம்.
* வாக்காதிகளின் தொழில் - ஐந்து - வசன, கமன, தான, விஸர்க்க,ஆனந்தம்
* பிருதிவின் வழிகுணம் - மூன்று - சாத்வீகம், இராஜதம், தாமதம்,
* விந்துவின் வழி: வாக்கு - நான்கு - நான்கு வைகரி , மத்திமை,சூக்குமை, பரை
* ஆண்டவன் நமது உடம்பில் இந்தத் தொண்ணாற்றாறு தத்துவங்களையும் அகத்தும், புறத்தும் அமைந்துள்ளான்.
புவனம்:
* இறைவன் எண்ணில்லாத அண்டங்களையும், அவற்றில் ஒவ்வொன்றிலும், பல கண்டங்களையும் அமைத்துள்ளான்
அவற்றில் எதுவேனும் ஒர் நாட்டில் ஓர் ஊரில் உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கவாறு பிறக்கச் செய்கிறான்.
போகம் :
உயிர்கள் ஐந்து இந்திரியங்கள் வழியாக நுகர விரும்பும் அனுபவங்களையும் இறைவனே கொடுக்கிறான், மேற்கூறிய தனு, கரண, புவன, போகங்கள் ஆருயிருகளுக்கு ஆண்டவன் கொடுக்கும் பேறுகளாம்.
உயிர்கள் :
உயிர்கள் எண்ணமுடியாதனவாக உள்ளன. அவை செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்தற் பொருட்டு அதற்கேற்ற உடம்பினை ஆண்டவன் கொடுக்கிறான். உயிர்கள் அஃறிணை, உயர்திணை, உடம்புகளால் எண்ணிறந்த பாவங்களை மீண்டும் ஈட்டுகின்றன.
* அதனால் பிறத்தல், இறத்தல் மீண்டும் மீண்டும் உண்டாகின்றது. இருவினை ஒப்புதல், மலபரிபாகமும் வந்த இடத்து அருளால் தனக்குள்ளே சிவஞானம் விளங்கும். விளங்கவே உயிர் இறைவன் திருவடியைச் சாரும்.
* எண்ணிறந்த உயிர்கள் உள்ளன என்பதை மேலே கூறினோம். அவை பதியாகிய இறைவனைப்போல அநாதியாகும். உயிர்கள் ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலத்தில் அழுந்திக்கிடக்கும்.
* மலபரிபாகம் வந்த இடத்து சத்திநிபாதம் பெற்ற உயிர் குருவருள் வாய்க்கப் பெற்று இறைவன் திருவடியைச் சாரும்.
உயிர்களின் அவத்தைகள் :
1. கேவலாவத்தை :
உயிர்களுக்குக் கேவலம், சகலம், சுத்தம் என மூன்றவத்தை உண்டு. கேவலாவத்தையில் எவ்விதமான உடம்பில்லாமல் ஆன்மா அஞ்ஞானத்தால் சூழப்பட்டுக்கிடக்கும். இறைவன் உலகைப் படைப்பதற்கு முன் உயிர்கள் இவ்விதக் கேவல நிலையில் இருக்கின்றன.
2. சகலாவத்தை :
சகல நிலையில் இறைவன் ஆன்மாக்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைக் கொடுக்கிறான். இந்நிலையில் ஆன்மாவுக்கு அறிவு சிறிது விளங்கும். ஆணவம் ஆன்மாவை மறைக்கும். அருளும், இருளும் இதனிடத்து அமையும். அருள் அறிவையும், இருள் அஞ்ஞானத்தையும் கொடுத்து நிற்கும்.
3.சுத்தாவத்தை :
சுத்தாவத்தையில் ஆன்மாவுக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத இருவினை ஒப்பு ஏற்படும். வினைகள் அகலும். கன்மம் அழியும். அறிவை மறைத்த மாயா சக்தி அருட்சக்தியாக மாறி ஞானத்தை அருளும்
அவத்தையும் இடமும் கருவியும் வருமாறு:
1.பாசம்:
* உயிர்களை நல்வினை செய்யவொட்டாது தடுக்கும் தடைகள் சில உள. அவற்றைப் பாசம் எனக் கூறுவர். பாசம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவற்றை மும்மலங்கள் எனக் கூறுவர்.
2.ஆணவம்:
* ஆணவம் என்பது அசுத்தம், சிறுமை, அஞ்ஞானம் எனப் பொருள்படும். ஆணவம் அநேக சக்திகளையுடையது. உயிர்கள் தோறும் செம்பில் களிம்பு போல் சேர்ந்திருப்பது. உயிர்களின் அறிவை மறைத்து அஞ்ஞானத்தைப் புகட்டுவது. இறைவனை உணர ஒட்டாமல் தடுப்பது.
3.கன்மம்:
* கன்மத்தை வினை எனவும் கூறுவர்.
* மனிதனுடைய செயல்கள் யாவும் கன்மமே.
* நற்கருமங்களை நல்வினை எனவும்.
தீயகருமங்களை தீவினை எனவும் கூறுவர்.
* நல்வினையால் வருவது புண்ணியம்.
* தீவினையால் வருவது பாபம்.
* புண்ணியம் இன்பத்தையும், பாபம் துன்பத்தையும் அளிக்கின்றது. புண்ணிய பாபங்களே பிறவிக்கும் காரணமாகிறது.
* ஆன்மா முன் செய்த கன்மத்தின் பயனை அனுபவிக்கும் பொருட்டுப் பல பிறவிகள் எடுக்கின்றது.
* இக்கன்மம், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என மூவகைப்படும்.
* ஆன்மா பிறவிகள் தோறும் செய்த வினைகளின் நிலைக்களம் சஞ்சிதம் எனப்படும்.
* இப்பிறவியில் அனுபவித்தற் பொருட்டுக் கொடுக்கும் இன்ப துன்பங்கள் பிராரப்தமெனவும், மேல் பிறவிகளில் அனுபவிக்க ஈட்டும் வினைகள் ஆகாமியம் எனவும் கூறப்படும்.
4.மாயை :
* ஆன்மாவை மயங்கச் செய்வதால் இது மாயை எனப்பட்டது.
* மனித உடம்பு மாயையினின்று தோன்றியது.
* உடம்பு காரணமாக ஆசையும், வெறுப்பும், இன்பதுன்பங்களும் உண்டாகின்றன.
* ஆன்மாவுக்கு கன்மம், ஆணவம் இரண்டும் மாயையால் உண்டாகின்றன.
* ஆதலால், மாயையும் பாசமாகும். மாயை உயிரின் அனுபவத்திற்காக பல கருவிகளையும், பொருள்களையும் அமைத்துத் தருகிறது.
* தனு, கரண, புவன. போகங்கள் அனைத்தும் மாயையே. ஆனால், மாயை ஜடம்.
* இதனை இயக்க ஒரு சக்தி வேண்டும். அச்சக்தியே கடவுள் ஆவர்.
சிவதத்துவங்கள்:
* நாதம்
* விந்து
* சாதாக்கியம் மாகேசுவரம் சுத்தவித்தை
* சிவம்
* சக்தி
* சதாசிவம்
* மகேசுவரன்
* உருத்திரன்
* அசுத்த மாயையிலிருந்து காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனும் வித்தியா தத்துவங்கள் ஏழும், ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கும் தோன்றும். மாயையினின்று தொண்ணூற்றாறு தத்துவங்களும் தோன்றும் எனக் கூறுவர்.