1. இந்து மதம் - தோற்றமும் வரலாறும்
தோற்றமும் வரலாறும் * ஆரியர்கள் சிந்துநதி தீரத்தில் வசித்து வந்தபோது அவர்களை சிந்துக்கள் அல்லது இந்துக்கள் எனப் பாரசீகரும், கிரேக்கரும் அழைத்து வந்தனர் என்றும், அந்த சிந்துக்களுடைய மதமே இந்து மதம் என ஆயிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். இந்திய நாட்டினரின் மதமே இந்து மதம் எனப் பொருள் கூறுவாரும் உளர்.
* ஒரு நாட்டின் பெயராலோ, ஒரு ஆற்றின் பெயராலோ நமது ஒப்புயர்வற்ற மதம் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது. ஆதலால் இதன் உண்மைப் பொருளை அறிய வேண்டுவது அவசியமாயிற்று.
* இந்து மதம் எனும் பெயர் அதன் கொள்கையை மேற்கொண்டு வந்ததாகும். இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம் து எனப் பிரிக்கலாம். உம் - ஹிம் - ஹிம்சையில், து- துய்க்கின்றவன்
* ஓர் உயிர் எந்தக் காரணத்தினாலாவது வருந்துவதாயிருந்தால். அதற்காக வருந்தி அத்துன்பம் தனக்கு வந்ததாய்க் கருதி அதை அகற்ற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான். அப்பண்பு வாய்ந்த மக்களைக் கொண்ட மதமே இந்து மதமாகும்.
இந்துமத கருத்து: 'ஹிம்ஸாயாம் தூயதேய : ஸ : ஹிந்து : இத்யபி தீயதே"
என்ற சுருதி வாக்கியத்தாலும் அறியலாம் .
* இதிலிருந்து இந்து மதம் என்பதற்கு, அன்பு மதம் எனப் பொருள் கொள்ளலாம்.
* அஹிம்ஸா பரமோதர்ம மேலான அறம் எனப்படுவது அஹிம்சையே. அஹிம்ஸையாகிய அரும்பு அன்பாகிய மலராக மலர்கிறது. அன்பிற்கு அடிப்படை அஹிம்ஸையே ஆகும்.
* அன்பே கடவுள். இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீங்காது உறைகிறான். எல்லா உயிர்ப்பிராணிகளுடைய உடம்பையே அவன் கோயிலாக கொண்டிருக்கிறான்.
* ஆதலால், எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தினால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
எனத் திருமந்திரம் கூறுகின்றது.
* இந்து மதம் என்பதற்கு "சநாதன தர்மம்" என வேறு ஒரு பெயர் கூறுவாரும் உளர்.
* இதற்கு அழிவிலா அறம் என்பது பொருள்.
* அன்றியும் திருநெறி, அருள்நெறி, தவநெறி, மெய்நெறி, சன்மார்க்கம் என்பன போன்ற பல பெயர்களை இட்டு வழங்குவாரும் உளர்.
* மதத்தைச் சமயம் எனவும் கூறுவர்.
* சமயம் என்பதில், சமை என்பது பகுதி.இதற்கு உடம்பை வளர்ப்பதற்கு உணவுப் பொருட்களைச் சமைப்பது போல இறைவனை அடைவதற்கு உரிய சாதனங்களைச் சமைப்பது அல்லது பக்குவப்படுத்துவது என்பது பொருளாகும்.
* சமயம் நமது கண்ணால் காணப்படும் உலகத்தையும், அனுமானத்தால் அறியத் தகுந்த ஆன்மாவினையும், இறைவனையும் இனிது காட்டும் ஞான ஒளி மனிதனுடைய உடல் நலத்திற்கும் உதவும் அமுதம்.
* மனிதர் அன்போடு அளவளாவி வாழ்வதற்குரிய வழிகளை வகுக்கும் ஒழுக்க பீடம் மனிதர்களுடைய இகபர வாழ்விற்குரிய நலன்கள் அனைத்தையும் அருளும் கற்பக மரம்.
இந்து மதப் பெருமைகள்: * இந்தியாவில் தோன்றிய இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது.
* ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.
* உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம் எனலாம்.
* பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை.
* இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை.
* பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயம் இந்து சமயம் வேதங்களையும் தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் அமைந்தது.
* இந்து மதம் வெறும் நம்பிக்கையோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து ஐயங்களை அகற்றி அறிவினைப் புகட்டுவது. மனிதர்களைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாது சுதந்திரத்தோடு வாழச்செய்வது.
* இவ்விதப் பெருமைகளை வேற்று நாட்டுப் பெருமக்களின் மாபெரும் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தர் போன்ற இந்து மத ஞானிகள் எடுத்தியம்பியுள்ளனர்.
* அவற்றைக் கேட்ட பல மேல்நாட்டு அறிஞர்களும், பத்திரிக்கை ஆசிரியர்களும் இந்து மதத்தைப் பெருமைப்படுத்திப் பேசியும், எழுதியும் பாரட்டியுள்ளனர் சிலர் இந்துக்களாகி இனிது வாழ்ந்து வருகின்றனர்.
* வேதம், தத்துவங்கள், பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், யோகா மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் அனைத்தும் ”இந்து மதம்” என்ற ஒரே கடலில் சங்கமமாகின்றன.
* இந்து சமயத்தில் பலவகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
* அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவை முக்கியமானவை.
* இவை பகவத்கீதை மற்றும் யோக சூத்திரங்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.
* அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் இந்துக்கள் அடைய வேண்டிய இலக்குகள் ஆகும்.
* நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், பிரம்ம சூத்திரம், புராணங்கள், இதிகாசங்கள், பாகவதம் முதலானவை இந்து மத நூல்களாகும்.