கடவுள்
* கடவுள் என்ற பதம் கட என்னும் பகுதியையும் உள் என்னும் தொழிற் பெயர் விகுதியையும் கொண்டது.
* கடவுள் என்பதற்கு எல்லாவற்றையும் கடந்தவர் எனப் பொருள் கூறலாம்.
* எவற்றின் உள்ளும் கடந்து நிற்பவர் எனவும், எல்லா அண்டங்களையும் அவற்றிலுள்ள எல்லா சராசரங்களையும் கடவுகின்றவர் அல்லது இயக்குகின்றவர் எனவும் பொருள் கூறுவர்.
* எண்ணில்லாத அண்டங்கள் பரவெளியில் தாமே சுழன்றும், அவற்றுள் சிலவற்றை சில சுற்றியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
* அவை ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் ஒரு வரையறைக்குட்பட்டு சஞ்சரிக்கின்றன என்று பூகோள், ககோள வல்லுநர்கள் கூறுகின்றனர்.
* எங்கும் நிறைந்த அணுக்கள் ஏக தாளத்தில் ஆடிக்கொண்டே இருக்கின்றன.
* இவ்வாறு இவற்றை ஆட்டுவிப்பது எது எனத் தெரியாமல் விஞ்ஞான வல்லுநர்கள் வியப்படைகின்றனர்.
* இதனை உற்று நோக்குமிடத்து மனித அறிவுக்கு எட்டாத ஒரு மகத்தான சக்தி உண்டு என்பதும், அதுவே இவ்வற்புத வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறதெனவும் விளங்கும்.
* இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்ப்பிராணிகளும், தோன்றி வாழ்ந்து மடிகின்றதை நாள்தோறும் நாம் பார்க்கிறோம்.
* இவை ஆதிகாலந்தொட்டே நடந்து வருகின்றன. இத்தொழில் ஒழுங்காய் நடக்க தோன்றாதவனும், அழியாதவனும், என்றும் நின்று நிலவுகின்றவனுமாகிய ஒருவன் அவசியம் வேண்டும். அவனே கடவுளாவான்.
* கடவுளுக்கு ஓர் நாமம் , ஊர், குணம், வடிவம், குறி முதலியன இல்லை .
* அவர் நமது உடம்பினுள் உயிர் இருப்பது போல உயிரினுள் உயிர்க்குயிராய் உறைகின்றார்.
* எல்லா உயிர்களுக்கும் உடம்பு உறைவிடம். இறைவனுக்கு நமது உயிர் உறைவிடம்.
"எவ்வுயிரும் பராபரன்றன் சந்நிதியதாகும் இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோவில் "
என ஆன்றோர் கூறியுள்ளனர்.
* சூரியன் ஒருவனாக இருந்து எல்லா உயிர்களுடைய கண்களுக்கும் ஒளியைக் கொடுப்பது போல கடவுள் ஒருவராய் இருந்து எல்லா உயிர்களுக்கும் விளக்கம் தருகிறார்.
* அக்கடவுள் கண்ணொளியையும், உள் உணர்வும் போல நம்முள் நின்று அரிய கருத்துகளை அறிவிக்கின்றனர்.
* இத்தகைய அருவநிலையில் இருக்கும் கடவுள் தனதருளால் உருக்கொண்டும் வருகிறார்.கடல் நீர் சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறுகிறது.
* அந்நீராவியே மேகமாகி மழையாய்ப் பொழிகிறது. நீராவி நமது கண்ணுக்குப் புலப்படுவதில்லை .
* அது மேகமாகி மழையாகமற்போனால் அந்த நீராவியால் நமக்கு ஒரு பயனுமில்லை .
* அது போல் கடவுள் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறார். அவர் மழை போல உருக்கொண்டு வராமற்போனால் நமக்கு அவரால் ஒரு பயனையும் அருள முடியாது. அதன் பொருட்டே கடவுள் அருள் உருக்கொள்ளுகிறார்.
அளவைகள் காண்டல் அளவை
* கடவுளைக் கண்ணால் காணமுடியவில்லை. கண்ணால் காணத்தகுந்த பொருள்களையே நாங்கள் உண்டென நம்புவோம். அல்லாதவற்றை நம்பமாட்டோம் எனச் சிலர் கூறுகின்றனர்.
* ஆனால் கடவுளை கண்ணால் கண்ட பெரியோர்கள் இந்து மதத்தில் பலர் உண்டு
* பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே என சம்பந்தர் கடவுளைத் தந்தைக்குச் சுட்டிக்காட்டியள்ளார்.
* கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என அப்பரும்,
* கண்ணால் யானும் கண்டேன் காண்க என மாணிக்கவாசகரும் கூறியுள்ளனர்.
* கடவுளிடத்தில் ஈடும் எடுப்புமில்லாத பத்தியுடைய பரமஞானிகள் அவரை நேரில் காணமுடியுமே தவிர சமயஞானமும், சமயவாழ்வும் இல்லாதவர்களால் அவரை என்றும் காணமுடியாது.
* கண்ணால் கண்டால் அன்றி நம்பமாட்டோம் என இவர்கள் கூறுவது தவறு.
* கடவுள் விறகில் தீ போலவும் பாலில் நெய்போலவும், மணியில் ஒலிபோலவும் மறைந்து உறைகின்றார்.
* கடவுளிடத்து உறவாகிய கோலினை நட்டு உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக்கடைய முன்னிற்பார்.
கருதல் அளவை:
* கண்ணால் காணமுடியாது போயினும் அனுமானத்தால் அவர் உண்டென உணரலாம்.
* மலையில் தீயுண்டு என்பதை புகையால் அறிவதுபோல கடவுளின் அரிய செயல்களைக் கண்டு அவர் உண்டென அறியலாம்.
நூலளவை:
* காட்சியாலும் அனுமானத்தாலும் அறியமுடியாத அரிய விஷயங்களை நூல்களால் உணரலாம். நாம் நமக்குத் தெரியாத இடங்களுக்குப் பிரயாணம் செய்யும்பொழுது கால அட்டவணை முதலியவற்றை நம்புகிறோம்.
* இச்சிறிய யாத்திரைக்கு இச்சிறிய நூலை நம்புவது போல இறைவனை பற்றி அறிவதற்கு அவனைப்பற்றிக் கூறும் நூலை ஏன் நம்பக்கூடாது இரயில்வே வழிகாட்டியை நம்பாதவனுக்கு யாத்திரை செய்ய முடியாததைப்போல சமய நூல்களைத் தெரியாதவனுக்கு கடவுளைப்பற்றியும் தெரிய முடியாதாகிவிடும்.
* நாம் ஒரு நதியில் நீராடுவதால் நதிக்கு எவ்விதப் பயனும் இல்லாதது போலவும் குளிர் மாற்றும் தீயின் அருகில் இருந்து நாம் குளிர்காய்வதால் தீக்கு எவ்விதப்பயனும் இல்லாதது போலவும் நாம் கடவுளை வணங்குவதால் கடவுளுக்கு எவ்விதப் பிரயோஜனமும் ஏற்படுவதில்லை .
* தண்ணீரில் குளிப்பதாலும் தீக்காய்வதாலும் உண்டாகும் நன்மை நமக்கேயாகும். ஆதலால் கடவுளை வணங்குவதால் நாமே நன்மை பெறுகிறோம் கடவுளுக்கு அருவம், அருவுருவம், உருவம் எனும் மூன்று நிலையுண்டு.
* அருவத்தில் அவர் சிவம், சக்தி, நாதம், விந்து எனவும் ரூபாரூபத்தில் சதாசிவம் எனவும் ரூபத்தில் மகேசுவரன், உருத்திரன், மால், அயன் எனவும் ஒன்பது விதமான பெயர்களைப் பெறுகிறார். இதனை சிவஞான சித்தியார்,
" சிவம் சக்தி நாதம் விந்து சதாசிவன் திகழு மீசன்
உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும் அருவம் நாலு இங்கு உருவம் நாலு உபயம் ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர் "- எனக் கூறும்.
கடவுளின் ரூபங்கள் 9 வகை:
அரூபம்
1.சிவம்
2.சக்தி
3.நாதம்
4.விந்து
ரூபாரூபம்
5.சதாசிவம்
ரூபம்
6.மகேசுவரன்
7.உருத்திரன்
8.மால்
9.அயன்
* இதனால் ஏகநாயகனே, சக்தியை எழுப்பி இரண்டுருவாகவும் சக்தியோடு சேர்ந்து சதாசிவம் ஆகவும், நாத விந்துவாகவும், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன், எனும் நான்கு மூர்த்திகள் ஆகவும், நவந்தரு பேதமாக நடிக்கின்றான் என்பது விளங்குகின்றது.
* இவ்வுண்மையை உணர்ந்து சிவசக்தி வாதம். சைவ வைணவ பேதம் முதலியவற்றை விட்டு இந்துக்கள் அனைவரும்
ஐக்கியப்பட்டு அவரவர்களுக்குரிய மூர்த்திகளை வழிபட்டு அனைத்தும் ஏகநாயக வழிபாடேயாகும் எனக்கொண்டு வாழ்வார்களாக.