TNPSC பொதுத்தமிழ் - பகுதி ஆ - இலக்கியம்
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பாடத்திட்டங்கள்
4.புறநானூறு - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்
எட்டுத்தொகை (Ettuthogai Noolgal))
* எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை.
* சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை.
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
எட்டுத்தொகை நூல்களும் நூல் ஆசிரியர்களும்
* அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர்
அகம் பற்றிய நூல்கள் = 5
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
புறம் பற்றிய நூல்கள் = 2
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
அகமும் புறமும் கலந்த நூல் = 1
- பரிபாடல்
* தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.
* இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர்.
* இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு.
* ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
1. புறநானூறு
* புறம்+நான்கு+நூறு = புறநானூறு
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
* புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 157
- அடி எல்லை = 4-40
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
வேறுபெயர்கள் :
* புறம்
* புறப்பாட்டு
* புறம்பு நானூறு
* திருக்குறளின் முன்னோடி
* தமிழ்க்கரூவூலம்
* தமிழர் வரலாற்று பெட்டகம்
* தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.
* மான விஜயம் என்னும் நாடகம் புறநானூறு இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது.
* சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்
1. புறநானூறு – ஒளவையார்
ஆசிரியர் குறிப்பு:
* ஒளவையார் சங்கப் புலவர், அதியமானின் நண்பர். * அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் * சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தும் அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஒளவையார். * சங்கப்பாடல்கள் பாடிய ஒளவையாரும், ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவர் அல்லர் வேறு வேறானவர்.
நூல் குறிப்பு:
* புறநானூறு – புறம் +நான்கு+ நூறு. * எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. * எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். * சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. * தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.
“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே! “- ஒளவையார்
2. புறநானூறு – மோசிகீரனார்
ஆசிரியர் குறிப்பு :
* தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர்.
* கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது.
* உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது, சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
* இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
நூல் குறிப்பு:
* புறம்+ நான்கு+ நூறு = புறநானூறு.
* இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
* புறம் என்பது மறம் செய்தலும்,அறம் செய்தலும் ஆகும்.
* பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு,கல்விப் பெருமை, முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றை அறியலாம்.
* புறநானூறு என்னும் இந்நூலைக் கற்பதனால் தமிழர் தம் பழங்கால புற வாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து கொள்கிறோம்.
“நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.”- மோசிகீரனார்
3. புறநானூறு – நக்கீரனார்
ஆசிரியர் குறிப்பு:
* மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
* இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
* பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல் வாடையையும் இயற்றியவர்.
* இவ் உலகியல் உண்மையை இப்பாடலில் கூறியுள்ளார்.
நூல் குறிப்பு:
* புறநானூறு= புறம் + நான்கு + நூறு
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
* புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* இப்பாடல்கள் வாயிலாக பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
“தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே”.- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
4. புறநானூறு – கண்ணகனார்
ஆசிரியர் குறிப்பு:
* இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
* கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
* அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.
* அவன் உயிர் துறந்த பொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.
நூற் குறிப்பு:
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு
* இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்டுள்ளது.
* இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை மன்னர்களின் வீரம், கொடை, புகழ் வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
* தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.
* இருநூற்றுப்பதினெட்டாம் பாடல் இடம் பெற்றுள்ளது.
முக்கிய அடிகள்:
“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே யாதும் ஊரே யாவரும் கேளிர் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
“இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் ”
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் எத்திசை செல்லினும் அத்திசை சோறே”
ஈயென இறத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று
“உறுமிடத்துதவா உவர்நிலம்”
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே“
"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"
2.அகநானூறு
* அகம்+நான்கு+நூறு = அகநானூறு
* அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
* இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- பாடியோர் = 145
- அடி எல்லை = 13-31
3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- 1. கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
- 2. மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
- 3. நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
திணைப் பாகுபாடு:
- 1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை( 200 பாடல்கள்)
- 2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)
- 4,14,24 என வருவன = முல்லைத்திணை( 40 பாடல்கள்)
- 6,16,26 என வருவன = மருதத்திணை( 40 பாடல்கள்)
- 10,20,30 என வருவன = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
* தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
* தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி
* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது
* நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
* நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்
முக்கிய அடிகள்:
நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்
யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
3. நற்றிணை
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 175
- அடி எல்லை = 9-12
நூற் குறிப்பு:
* நல் + திணை = நற்றிணை
* திணை = நிலம், குடி, ஒழுக்கம்
* நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
* திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
* எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல்
* வேறுபெயர் : நற்றிணை நானூறு
* இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
* இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
* இந்நூலினை தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
* வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
* நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.
* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன.
* எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும்,நல் என்று அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே.
* நற்றிணை பல்வேறு காலங்களில் புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
* இதில் ஐவகைத் திணைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
* இதிலுள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரல்லையும் கொண்டவை.
* நற்றிணைப் பாடல்கள் நானூறு; பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.
ஆசிரியர் குறிப்பு:
மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.இவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடல்களும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் உள்ளன.
இவர் சங்க காலத்தவர்.
நற்றிணை:(தோழி தலைமகனிடம் கூறியது)
“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”.- மிளைகிழான் நல்வேட்டனார்
முக்கிய அடிகள்:
'சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில் பிறப்புப் பிறிதாகுவ தாயின் மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)'
கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)
4.குறுந்தொகை
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 205
- அடி எல்லை = 4-8
* குறுமை+தொகை = குறுந்தொகை
* குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
* ‘நல்ல’ எனும் அடைமொழி பெற்ற நூல்.
* குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.
* அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள்.
* இப்பாடல்கள் குறைந்த நான்கடிகளையும், அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.
* இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
* பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
* இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
* இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
வேறு பெயர்கள்
* நல்ல குறுந்தொகை
* குறுந்தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது)
தொகுப்பு
* தொகுத்தவர் = பூரிக்கோ
* தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு:
* இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார்
* 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்
* இத்தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார்.
* ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
* நூலை முதலில் வெளியிட்டவர் : சௌரிபெருமாள் அரங்கனார்
* நூலை முதலில் பதிப்பித்தவர் : சி.வை.தாமோதரம் பிள்ளை
* இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்
* இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் : முருகன்
குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்:
* அணிலோடு முன்றிலார்
* குப்பைக் கோழியார்
* காக்கைப்பாடினியார்
* விட்ட குதிரையார்
* மீனெறி தூண்டிலார்
* வெள்ளிவீதியார்
குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்
* உருத்திரன்
* சாண்டிலியன்
* உலோச்சணன்
* பௌத்திரன்
குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்
* சோழன் கரிகாலன்
பசும்பூண் பாண்டியன்
ஓரி
குட்டுவன்
பாரி
நள்ளி
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
* ஔவையார்
* வெள்ளிவீதியார்
* வெண்பூதியார்
* ஆதிமந்தி
பொதுவான குறிப்புகள் :
* எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
* பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
* வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்.
* உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
* குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
* திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
* இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய பாடல் வரிகள்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே - (தேவகுலத்தார்)
வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே
5. ஐங்குறுநூறு
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 500
- பாடியோர் = 5
- அடி எல்லை = 3-6
பெயர்க்காரணம்
* ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
* குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
தொகுப்பு
* தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.* தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
உரை, பதிப்பு
* முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்* முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
கடவுள் வாழ்த்து
* கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்* கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
நூல் பகுப்பு
* குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது
* ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
* குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.
திணை | பாடியோர் |
---|---|
குறிஞ்சி | கபிலர். |
முல்லை | பேயனார் |
மருதம் | ஒரம்போகியார் |
நெய்தல் | அம்மூவனார் |
பாலை | ஓதலாந்தையார் |
பாடியோர்
* இந்நூலை இயற்றியவர்கள் பற்றிப் பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
மருதமோ ரம்போகி, நெய்தலம் மூவன் கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே நூலை ஓது ஐங்குறு நூறு
* மருதம் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
* நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
* குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
* பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
* முல்லை திணை பாடல்கள் பாடியவர் = பேயனார்
நூலில் கூறப்படும் அரசர்கள்
* கடுமான்
* குட்டுவன்
* ஆதன்
* அவினி
* கொற்கை கோமான்
* மத்தி
நூலில் கூறப்படும் ஊர்கள்
* தொண்டி
* தேனூர்
* கழார்(காவிரி)
* கொற்கை
கிடைக்காதவை
* ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பொதுவான குறிப்புகள்
* தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல்.
* தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
* அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
* சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
* இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
* தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
முக்கிய அடிகள்:
அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழி நீரே - (கபிலர்)
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க விளைக வயலே வருக இரவலர் என வேட்டோய் யாயே - (ஓரம்போகியார்)
பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற் கழனி யூரன்
வாழி ஆதன் வாழி அவினி
6. கலித்தொகை
- திணை = அகத்திணை
- பாவகை = கலிப்பா
- பாடல்கள் = 150
- அடி எல்லை = 11-80
- பாடியோர் = 5
பெயர்க்காரணம்
* கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் கலித்தொகை
கலிதொகையின் சிறப்பு
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன் விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம் பொங்கு கலி இன்பப் பொருள்
* என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.
வேறு பெயர்கள்
* கலி
* குறுங்கலி
* கற்றறிந்தோர் ஏத்தும் கலி
* கல்விவலார் கண்ட கலி
* அகப்பாடல் இலக்கியம்
உரை, பதிப்பு
* நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
* நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
கடவுள் வாழ்த்து
* இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
* இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பாடியோர்
பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி; மருதனிள நாகன் மருதம்; - அருஞ்சோழன் நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி
* பாலை திணை பாடல்கள் பாடியவர் = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
* மருதம் திணை பாடல்கள் பாடியவர் = மருதன் இளநாகனார் (36 பாடல்கள்)
* நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
* குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர் (29 பாடல்கள்)
* முல்லை திணை பாடல்கள் பாடியவர் = சோழன் நல்லுருந்திரன் (17 பாடல்கள்)
தொகுப்பு
* இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
* தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
* நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
ஆசிரியர் குறிப்பு:
* இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
* நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
* இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
* இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
நூற் குறிப்பு:
* எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்
* எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது.
* கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்ந்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
* கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
* கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
* இந்நூலை “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” எனச் சிறப்பிப்பர்
* இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
* இசையோடு பாடுவதற்கு ஏற்றது
பொதுவான குறிப்புகள்
* தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
* பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
* கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
* பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
* பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
* நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
* பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
* கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
* ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
* பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
* காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
* மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.
முக்கிய அடிகள்:
“காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு”
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்”
"ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல் செரிவேனப்படுவது கூறியது மறா அமை"
அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”
7. பதிற்றுப்பத்து
* சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
* பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.
பதிற்றுப்பத்தின் உருவம்:
* திணை = பாடாண் திணை (புறத்திணை)
* பாவகை = ஆசிரியப்பா
* பாடல்கள் = 100( கிடைத்தவை 80)
* புலவர்கள் = 10(அறிந்த புலவர் 8)
* அடி எல்லை = 8-57
பெயர் காரணம்:
* பத்து + பத்து = பதிற்றுப்பத்து
* பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
* பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல் கூறுகிறது.
வேறுபெயர்:
* இரும்புக்கடலை
தொகுப்பு:
* இந்நூலை தொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
உரை:
* பழைய உரை ஒன்று உள்ளது.
* பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை
பதிற்றுப்பத்தில் புலவர்களும் பரிசும்:
பொதுவான குறிப்புகள்:
* இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே தினைப் பாடலால் ஆனது.
* இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
* ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
* வழக்கின் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
* பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
* சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
* பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல்.(இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
* நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
* பகைவரது பெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
* “பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்
முக்கிய அடிகள்:
ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான் ஈத்தொறு மாவள்ளியன் மாரி பொய்க்குவது ஆயினும் சேரலாதன் பொய்யலன் நசையே வாரார் ஆயினும், இரவலர் வேண்டித் தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும் நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்
8. பரிபாடல்
பரிபாடலின் உருவம்:
திணை = அகமும் புறமும்
பாவகை = பரிபாட்டு
பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
புலவர் = 13
அடி எல்லை = 25-400
பெயர்க்காரணம்:
பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்.
வேறுபெயர்கள்:
பரிபாட்டு
ஓங்கு பரிபாடல்
இசைப்பாட்டு
பொருட்கலவை நூல்
தமிழின் முதல் இசைபாடல் நூல்
தொகுப்பு:
இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை, பதிப்பு:
பரிமேலழகர் உரை உள்ளது.
நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
பாடல் பகிர்வு முறை:
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; – மருவினிய வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம்
பரிப்பாடல் கூறும் என்னுப்பெயர்கள்:
பொதுவான குறிப்புகள்;
தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
“கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
இந்நூல் இசையோடு பாடப்பட்டது.
மு.வ கூற்று:
சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை
முக்கிய அடிகள்:
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுந் சீறார் பூவின் இதழகத்து அனைய தெருவம், இதழகத்து அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ! கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!
பத்துப்பாட்டு
* பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர்
* பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்
பத்துப்பாட்டு (pathupaatu)
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநெல் வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
* இப்பத்துப்பாட்டின் சிற்றெல்லை 103 அடிகள், பேரெல்லை 782 அடிகளாகும்.
* பத்துப்பாட்டின் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டுள்ளது.
* பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டுள்ளது
* ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புறநூல்களாகும்
* ஏனைய ஐந்து நூல்களும் அகம்(முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை), புறம் (ஆற்றுப்படை நூல்கள் மற்றும் மதுரைக் காஞ்சி) சார்ந்தவைகளாகும்
* பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று. அது நெடுநல்வாடை
1. திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் உருவம்:
* பொருள் = ஆற்றுப்படை
* திணை = புறத்திணை
* பாவகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 317
கடவுள் வாழ்த்து போன்றது:
* பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
* பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
* வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = நக்கீரர்
* பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
வேறு பெயர்:
* முருகு
* புலவராற்றுப்படை
உரை:
* நச்சினார்க்கினியர் உரை
* பரிமேலழகர் உரை
முருகனின் அறுபடை வீடு:
நூல் குறிப்பிடும் செய்திகள்:
* முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
* இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
* மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
* நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
* ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
* ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
பொதுவான குறிப்புகள்:
* பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
* நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
* ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
* முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
முக்கிய அடிகள்:
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்
2. பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படையின் உருவம்:
* பொருள் = ஆற்றுப்படை
* திணை = புறத்திணை
* பாவகை = வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
* அடி எல்லை = 248(ஆற்றுப்படை நூல்களுள் சிறியது)
பொருநர்:
* ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர்.
* பொருநராற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரை கூறுகிறது.
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = முடத்தாமக் கண்ணியார்
* பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
உரை:
* இந்நூலிற்கு நச்சினார்க்கினியர் உரை உள்ளது.
* மகாதேவ முதலியார் உரை
பெயர்க்காரணம்:
* பொருநரைப் புரவலனிடம் பரிசில் பெற்ற பொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததால் பொருநராற்றுப்படை எனப்பட்டது.
பொதுவான குறிப்புகள்:
* கரிகாற் சோழன், பொருநரை அனுப்பும் போது ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.
* கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.
* பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகாற் சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது.
* கரிகாலனின் வலிமையை “வெண்ணித்தாங்கிய வொருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படுகிறது.
வறுமைக் கோலத்தோடு விளங்கிய ஆடையை நீக்கிப் பாம்பின் தோல் ஒத்த மெல்லிய ஆடையை கரிகாலன் வழங்குவான் எனப் கூறப்படுகிறது.
முக்கிய அடிகள்:
கொள்ளை உழுகொழு ஏய்ப்ப, பல்லே எல்லையும் இரவும் ஊன்றுகிறது மழுங்கி
ஆறுதலைக் கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
சாறுகழி வழிநாள் சோறுநசை வறாது வேறுபுலம் முன்னிய விறகறிபொருந
3. சிறுப்பாணாற்றுப்படை
சிறுப்பாணாற்றுப்படையின் உருவம்:
* பொருள் = ஆற்றுப்படை
* தினை = புறத்திணை
* பாவகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 269
சிறப்புப் பெயர்:
* சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)
பாணர்:
* பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
* சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர்
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
* பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்
கடை ஏழு வள்ளல்கள்:
உரை
* நச்சினார்க்கினியர் உரை உள்ளது
* மு.வை.அரவிந்தன் உரை
பொதுவான குறிப்புகள்:
* தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
* திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
* நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
* இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
* வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.
முக்கிய அடிகள்:
பன்மீன் நடுவே பால்மதிபோல இன்நடை ஆயமொடு இருந்தோன்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மடமா நோக்கின் வாணுதல் விறலியர்
தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை
எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்
4. பெரும்பாணாற்றுப்படை
பெரும்பானாற்றுப்படையின் உருவம்:
* பொருள் = ஆற்றுப்படை
* திணை = புறத்திணை
* பாவகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 500
பெயர்க்காரணம்:
* பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும்,
* சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப்படை ஆயிற்று.
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார்
* பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன்
வேறு பெயர்கள்:
* பாணாறு
* சமுதாயப் பாட்டு
தொண்டைமான்:
* சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.
* சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் நாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.
* துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்
பொதுவான் குறிப்புகள்:
* நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
* இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
* தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
* திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
* யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
* நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.
முக்கிய அடிகள்:
பொழிமலை துறந்த புகைவேய் குன்றத்து பழுமரம் தேடும் பறவை போல
மணிவார்த் தன்ன மாயிரு மருப்பின் பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டி நர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
புனலோடு மகளிர் இட்ட பொலங்குழை இறைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்து
5. மலைபடுகடாம்
மலைப்படுகடாம் உருவம்:
* பொருள் =ஆற்றுப்படை
* திணை = புறத்திணை
* பா வகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)
பெயர்க்காரணம்:
* மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
* கடாம் = யானையின் மதநீர்
வேறுபெயர்:
* கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
* பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்
மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள்:
பொதுவான குறிப்புகள்:
* நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
* கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
* சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
* பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
* நன்னனின் தலைநகரம் = செங்கண்மா(இன்றைய செங்கம்)
* நன்னனின் மலை = நவிரமலை
* நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
* ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
* நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின்
* முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
செருசெய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியீர்
இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து பலநாள் நிற்பி
6.குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டின் உருவம்:
* திணை = குறிஞ்சித்திணை
* பா வகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 261
வேறு பெயர்கள்;
* பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
* களவியல் பாட்டு
புலவர்:
* பாடிய புலவர் = கபிலர்
* ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக
அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள்:
* எளித்தல்
* ஏத்தல்
* வேட்கை உரைத்தல்
* ஏதீடு
* தலைப்பாடு
* உண்மை செப்பும் கிளவி
* கூறுதல் உசாதல்
பொதுவான குறிப்புகள்:
* ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
* அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
* கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர்.
* 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
* தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
* “இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.
முக்கிய அடிகள்:
முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய களம் கொடின் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்
7. முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டின் உருவம்:
* பொருள் = ஆற்றியிருத்தல்
* திணை = அகத்திணை(முல்லை)
* பா வகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது)
பெயர்க்காரணம்:
* முல்லைத் திணையை பாடியதால் முல்லைப்பாட்டு எனப்பட்டது.
* “இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம்.
வேறு பெயர்கள்:
* நெஞ்சாற்றுப்படை
* முல்லை
பாடியவர்:
* இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்
* இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர்.
தலைவன்:
* முல்லைப்பாட்டு அகநூல் என்பதால் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
* இந்நூலில் வரும் “கானம் நந்திய செந்நிலப் பெருவழி” என்னும் தொடரை கொண்டு இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கூறுவர்.
உரை:
* இந்நூலுக்கு மறைமலையடிகள் ஆராய்ச்சி உரை எழுதி உள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
* பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.
* முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
* முதல் 23 அடிகள் = தலைவியின் பிரிவித் துயர் கூறப்பட்டுள்ளது.
* அடுத்த 55 அடிகள் = அரசனின் பாசறை அமைப்பு, பாசறையின் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளது.
* அடுத்த பத்து அடிகள் தலிவியின் அவல நிலை கூறப்பட்டுள்ளது
* இறுதியில் முல்லைநிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர் காலத்தில் அவன் திரும்புதல் கூறப்பட்டுள்ளது
முக்கிய அடிகள்:
நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலறி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்குதடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுரத்து இரவுபகல் செய்யும் திண்பிடி ஒண்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
8.பட்டினப்பாலை
பட்டினப்பாலையின் உருவம்:
* திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும்
* துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
* பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
* அடி எல்லை = 301
பெயர்க்காரணம்:
* பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்:
* வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
* பாலைபாட்டு
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்
* பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
உரை:
* மறைமலையடிகள் உரை
* ரா.இராகவையங்கார் உரை
பொதுவான குறிப்புகள்:
* பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
* இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
* பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும்.
* இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
* இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
* இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
* பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
* இந்நூலில் கிளவித் தலைவனின் பெயர் கூறப்படவில்லை.
முக்கிய அடிகள்:
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலை பிறந்த மணியும் பொன்னும் குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வதுஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே
9.நெடுநல்வாடை
நெடுநல்வாடையின் உருவம்:
* திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
* பாவகை = ஆசிரியப்பா
* அடி எல்லை = 188
பெயர்க்காரணம்;
* தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
* நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை
வேறு பெயர்கள்:
* பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
* மொழிவளப் பெட்டகம்
* சிற்பப் பாட்டு
* தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.க)
புலவர், தலைவன்:
* பாடிய புலவர் = நக்கீரர்
* பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
உரை:
* கோதண்டபாணி பபிள்ளை உரை
* வேங்கடா செட்டியார் உரை
திரு.வி.காவின் கூற்று;
* நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
* திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல * சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன
என்றார்.
* திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
* நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
* “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
* பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
* இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
* பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை,
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே
எனப் புகழ்கிறார்.
முக்கிய அடிகள்:
குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை பதிவான வீழ, கறவை கன்று கோள் ஒழியக் கடிய வீசி
10.மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சியின் உருவம்:
* திணை = மருதம், புறத்திணை
* பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
* அடி எல்லை = 782
பெயர்க்காரணம்:
* மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி
வேறு பெயர்கள்:
* மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
* கூடற் தமிழ்
* காஞ்சிப்பாட்டு
புலவர், தலைவன்;
* பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
* பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியனின் போர் வெற்றி:
* கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
* சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
* குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்
பாண்டியனின் முன்னோர்:
* முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
* பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
* நிலத்திரு திருவிற் பாண்டியன்
பொதுவான குறிப்புகள்:
* நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
* தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
* பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
* பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
* மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
* இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
* மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.
முக்கிய அடிகள்:
கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர் திரையீடு மணலிலும் பலரே, உரைசொல் மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு புத்தேன் உலகம் கவினிக் காண்வர மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி