பிரத்யேக சரக்கு ரயில் தடச் சேவை: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- ஹரியானா - ராஜஸ்தான் வரை, கிழக்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 'நியூ ரிவாரி - நியூ மடார்' ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 306 கி.மீ., துாரத்திற்கு, சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.7% ஆக சரியும்
- கொரோனா ஊரடங்கால் நாட்டின் தொழில்துறைகள் அனைத்தும் முடங்கின. இதனால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்தது. பொருளாதாரம் -23 சதவீதத்துக்கு மேல் சரிந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் -23.9 சதவீதம், 2ம் காலாண்டில் -7.5 சதவீதம் சரிந்திருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளால் பொருளாதாரம் ஓரளவு மீளத் தொடங்கியதாக கூறப்பட்டாலும், தொழில்துறைகள் பழைய நிலைக்கு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், விவசாயம் தவிர அனைத்து துறைகளிலும் சரிவு காணப்படுகிறது.
- கடந்த 2011-12 நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடும்போது, நடப்பு 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 134.4 லட்சம் கோடியாக இருக்கும். முந்தைய ஆண்டில் இது 145.66 லட்சம் கோடியாக இருந்தது.
- இதன்படி நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -7.7 சதவீதமாக இருக்கும். முந்தைய நிதியாண்டில் இது 4.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. கொரோனா ஊரடங்குதான் இதற்கு முக்கிய காரணம்.
- அதோடு நடப்பு நிதியாண்டில் உற்பத்தி துறை -9.4 சதவீதமாக சரியும். கடந்த நிதியாண்டில் இது 0.03 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது வர்த்தகம், ஓட்டல்கள், தொலைத்தொடர்பு சேவைகள், சுரங்கம் சார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படும்.
- விவசாய துறை மட்டுமே இதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. இந்த துறை நடப்பு நிதியாண்டில் 3.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் சுத்தம் செய்யும் ரோபோ: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டில்லி விமான நிலையத்தில் விமான உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான ரோபோ தொழில்நுட்பத்தை இன்று தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஐசாட்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யு.வி.-சி கிருமிநாசினி அமைப்பு உலகளவில் கிருமிநாசினியின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காஷ்மீர் தொழில் வளர்ச்சிக்கு ரூ.28,400 கோடி திட்டம்
- காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் வாயிலாக உள்ளூரைச் சேர்ந்த, 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இந்த பகுதியில், சமத்துவ சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைகளை தாண்டி, தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில், தயாரிப்பு தொழில் துவங்குவோருக்கு, இயந்திர தளவாட முதலீடுகளில், 50 சதவீதம்; நகர்ப்புறங்களில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு
- நேரடி துறைமுக வினியோகம் மற்றும் நேரடி துறைமுக நுழைவு வசதிகள், இடர் மேலாண்மை அமைப்பு, சுங்க நுழைவை மின்னணுமயமாக்கியது, ஒற்றைச் சாளர வசதிகள் என பல வர்த்தக வசதிகளை, 2015 முதல், இந்தியா அறிமுகம் செய்து வந்துள்ளது.
- மேலும், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, அவை அப்படியே தொடர்ந்து வருகின்றன.
- உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், நேரடி மானியங்கள், விலை ஆதரவு திட்டங்கள், கட்டண சலுகைகள், விருப்பமான வட்டி விகிதங்கள் என, பல சலுகைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.வளர்ந்த நாடுகள், இந்தியாவில் வேளாண் துறையில் அதிக தாராளமயமாக்கத்தை விரும்புகின்றன.