பொது நிதியியல்
பொது நிதியியல் அல்லது அரசின் நிதி என்பது பொருளாதாரத்தின் ஒரு கிளையாகும். இது ஆண்டு நிதிநிலை அறிக்கை (Budget), அரசின் வருவாய் மற்றம் செலவினங்களைப் பற்றியதாகும். இது அரசாங்கத்தின் நிதியியல் கொள்கைப் பற்றிய மதிப்பீடாகும் இது அரசின் வழிமுறைகள் மற்றும் முயற்சிகளைப் பற்றி அடையாளம் கண்டு கொள்ளுதலும் ஆய்வு செய்தலுமாகும்.
“பொது நிதி” என்பது அரசின் நிதி சார்ந்த செயல்பாடுகளாகும். இது அரசின் கருவூல செயல்பாடுகளோடும் தொடர்புடையதாகும்.
பொது நிதி என்பது நிதிப் பொருளாதாரம் (Fiscal Economy) என்றும் அழைக்கப்படும்.
1. பொதுச் செலவு
2. பொது வருவாய்
3. பொதுக் கடன்
4. நிதி நிர்வாகம்
5. கூட்டாட்சிமுறை (மத்திய மாநில நிதி உறவுகள்)
1. பொதுச் செலவு
நவீன அரசு ஒரு நல அரசு, எனவே அதிகப்பட்ச பொது நலத்தை நிலைநாட்டுவது அதனுடைய பொறுப்பாக உள்ளது. இதற்கான அரசு பல வகையான பணிகளை மேற்கொள்ளும். இதனால் அரசுக்கு அதிகமான பணச் செலவுகள் ஏற்படும். இப்பிரிவில் அரசின் அடிப்படைக் கொள்கையானது அரசின் நிதி ஆதாரங்களை பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காகச் செலவு செய்வதேயாகும்.
2. பொது வருவாய்அரசு பெறுகின்ற வருவாய், அரசின் வருவாய் எனப்படும். இது அரசின் வருமானத்தை எவ்வாறு பெருகச் செய்வது என்பதை பற்றியும், வரிவிதிப்பின் கொள்கைகளைப் பற்றியும், அதனோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சார்ந்ததாக உள்ளது. பொதுவருவாயானது வரி வருவாய், வரி அல்லாத வருவாயை உள்ளடக்கியதாகும்.
வரி வருவாய் என்பது பல வகையான வரிகள், வரித் தாக்கம் (Impact) மற்றும் வரி நிகழ்வுகள் (Incident) பற்றியதாகும். வரியில்லாத வருவாயானது (1) வணிக வருவாய் (பொது துறையின் விற்பனையால் கிடைத்த வருவாய், மற்றும் இலாபம்) (2) நிர்வாக வருவாய் (கட்டணங்கள், அனுமதி கட்டணங்கள், சிறப்புத் தீர்வைகள்) (3) வெகுமதி மற்றும் மானியங்கள்.
இப்பிரிவு அரசின் கடன்களை எப்படி அதிகரிப்பது என்பது பற்றியும், அதிகரிக்கின்ற கடன்களை எப்படித் திருப்ப செலுத்துவது என்பது பற்றியும் கூறுகிறது. பொது மக்களிடமிருந்து அரசு பெறும் கடன்களுக்குப் பொதுக்கடன் என்றும் கூறுவர். நவீன அரசானது தன்னுடைய செலவினங்களை, வரிகள், மற்றும் வரிகள் அல்லாத வருவாய்கள் மூலம் சமாளிக்க முடியாத ஒரு நிலையில் உள்ளது. ஆகவே அரசின் வருவாயானது, அரசின் செலவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதனால் அரசானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் வாங்குவதற்கு உந்தப்படுகிறது. உள்நாட்டு கடன் என்பது, அரசு பொது மக்களிடமிருந்தும் வணிக வங்கிகளிடமிருந்தும், மைய வங்கிகளிடமிருந்தும் கடன் பெறுவதாகும். மக்களிடமிருந்தும் வெளிநாட்டுக் கடன் என்பது, உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF) மற்றும் அயல்நாடுகளிலிருந்து பெறுகின்ற கடனாகும்.
4. நிதி நிர்வாகம்அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே நிதி நிர்வாகமாகும். மேலும் நிதி நிர்வாகம் என்பது, வரவு செலவு திட்டங்களை வடிவமைத்தல், உருவாக்குதல், ஒப்பளித்தல் மற்றும் பாராளுமன்றம், சட்டமன்றங்களில் தாக்கல் செய்தல், தணிக்கை செய்தல், நடைமுறைப்படுத்துதுல் ஆகியவற்றை பற்றியது.
5. கூட்டாட்சி நிதிபொதுநிதியின் ஒரு உட்பிரிவே கூட்டாட்சி நிதியாகும். கூட்டாட்சி என்பது இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அரசுகளின் கூட்டமைப்பு. இச்கூட்டாட்சி அமைப்பில் மைய, மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் ஒருங்கிணைந்துள்ளன. இது, இவ்வரசுகளிடையே நிலவுகிற நிதி உறவுமுறைகள் பற்றியும், அதனோடு சம்மந்தமுடைய பிரச்சனைகளைப் பற்றியும் ஆராய்கிறது.
வரி என்பதன் பொருள்வரிகள் மூலம் பெறப்படுகின்ற வருமானமே பொதுவருவாயின் முக்கிய வருமானமாகும். ஒரு குடிமகன் (அ) ஒரு நிறுவனம் அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்தக்கூடிய ஒரு செலுத்துகையே வரி எனப்படும். வரி விதிப்பில் கட்டாயத் தன்மை காணப்படுகிறது.
வரி இலக்கணம்பேராசிரியர் செலிக்மேன் (Seligman) “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும், செலுத்துகை, அரசிடம் இருந்து எந்தவித நேரடி நன்மையையும் எதிர்பார்க்காமல், கட்டாயமாக செலுத்த வேண்டியதே வரி எனப்படும் “ என கூறுகிறார்.
வரி விதிப்பின் விதிகள்ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்புக் கொள்கைகள் பின்வருமாறு
1. சமத்துவ விதி
2. தெளிவு விதி
3. வசதி வதி
4. சிக்கன விதி
வரிகளின் வகைகள்
வரிகளின் வகைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம், அவை யாவைன.
1. நேர்முக மற்றும் மறைமுக வரிகள்
2. விகித விரிவிதிப்புமுறை, வளர்வீதமுறை, தேய்வு வீதமுறை, மிதவளர்வீத முறை.
3. சிறப்புத் தீர்வை மற்றும் மதிப்பு மீதான வரி
4. மதிப்புக் கூட்டு வரி (VAT)
5. ஒன்று (அ) பலதரப்பட்ட வரிகள்
மத்திய அரசுக்குக் கீழ்காணும் இரு முறைகளில் வருமானம் கிடைக்கிறது
1. வரி சார்ந்த வருமானம்
2. வரி சாராத வருமானம்
1. வேளாண்மை வருமானம் தவிர்த்து பிற வருமானங்களின் மீதான வரிகள்
2. நிறுவனங்களின் மீதான வரிகள்
3. செலவினங்கள் மீதான வரிகள்
4. சொத்துக்கள் மீதான வரிகள்
5.அன்பளிப்பு வரிகள்
6.செல்வ வரிகள்
7. மூலதனத்தின் மீதான வரிகள்
8. ஆயத்தீர்வை வரிகள்
9. சுங்கத் தீர்வுகள் (ஏற்றுமதி மற்றும் இறக்குமரி வரிகள்)
1. நிதிசார் பணிகள்
2. வட்டி வருவாய்கள்
3. இலாப பங்குகள்
4. பொதுப் பயன், பணிகள்
5. சமூக, சமுதாயப் பயன் பணிகள்
6. பொருளாதார பயன் பணிகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அரசுகள் வரி விதிப்பின் மூலம் வருமானம் பெறும் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கு நேரடியான நிதியுதவியை மத்திய அரசாங்கமே அளித்து உதவும்.
மாநில அரசின் மூலம் விதிக்கப்படும் வரிகள்
1. நில வருவாய் (வரி, தீர்வை வசூலிப்பு உட்பட)
2. விற்பனை மற்றும் செய்தித்தாள் தவிர மற்ற பொருள்கள் மீதான வரிகள்.
3. வேளாண்மை வருவாய் மற்றும் நிலம் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள்.
4. நிலம், மனைகள், கட்டிடங்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
5. வேளாண்மை நிலம் சார்பான, வேளாண் பண்ணை வரிகள்.
6. மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள்
7. ஒரு மாநிலத்திலிருந்து, பிரிதொரு மாநிலத்திற்குப் பண்டங்களைக் கொண்டுவரும்
போது விதிக்கப்படும் வரிகள்.
8. கனிமப் பொருள்களின் உரிமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
9. மின்சார நுகர்வு, விற்பனை மீதான வரிகள்
10. விலங்குகள், படகுகள், வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
11. இருப்புப் பாதை, உள்நாட்டு நீர்வழி ஆகியவற்றில் கொண்டுச் செல்லும் சரக்குகள்,
பயணிகளின் மீது விதிக்கப்படும் வரிகள்.
12. முத்திரைத்தாள் வரிகள், நீதிமன்ற கட்டணம், மற்றும் பதிவுக் கட்டணங்கள்.
13. பொழுதுபோக்கின் மீது விதிக்கப்படும் வரிகள்
14. விளம்பரங்கள், செய்தித்தாள் தவிர்த்து பிற விளம்பரங்கள் மீதான வரிகள்
15. தொழில்கள், வர்த்தகம், வேலைகள் மீதான வரிகள்
16. நீர்ப்பாசன மற்றும் காடுகள் மூலம் கிடைக்கும் வரி வருமானங்கள்
17. மத்திய அரசின் மானியங்கள் மீதான வரிகள்
18. பிற வருமானங்கள், அதாவது பதிவுக் கட்டணம், வருமான வரியில் ஒரு பகுதி, சுங்க
வரிகள் மற்றும் கடன்கள் மீதான வரிகள்.
1. விகித முறை வரிகள்
2. வளர்வீத முறை வரிகள்
3. தேய் விகித முறை வரிகள்
4. மித வளர்வீத முறை வரிகள் என நான்கு வகைப்படுத்தப்படுகின்றன.
இவ்வகை வரிகள் மாறாது, நிலையானதாக உள்ளன. வருமானம் அதிகமானாலும் குறைந்தாலும் வரிவிதிப்பில் மாற்றம் ஏற்படாது, ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் ஒரே மாதிரியான வரி விகிதம் விதிக்கப்படும்.
2. வளர்வீத வரிவிதிப்பு முறை (Progressive Tax)இம்முறையில் வரியின் அடிப்படை தளம் அதிகரிக்கும் போது, வரிவிகிதமும் அதிகரிக்கின்றது. வருமானம் அதிகரித்தால் வரி விகிதமும் அதிகரிக்கும் (எ.கா.) வருமான வரி.
3. தேய்வு வீத வரிவிதிப்பு முறை (Regressive Tax)வருமானம் உயரும் போது, செலுத்த வேண்டிய வரி விகிதம் குறைந்தால், அது தேய்வு வீத வரி எனப்படும். இந்த முறையில் பணக்காரரைவிட ஏழைகள் மீது வரிச்சுமை அதிகரிக்கிறது. எனவே இத்தகையான வரிவிதிப்பு நியாயமற்றதாகும்.
4. மிதவளர்வீத வரிவிதிப்பு முறை (Degressive Tax)விகிதமுறை வரி விதிப்பு, வளர்வீத வரிவிதிப்பு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையே மிதவளர்வீத வரிவிதிப்பாகும். இதில் வருவாய் உயர, உயர வரி வீதமும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை உயர்ந்து பின்பு சீரான நிலையை அடைகிறது. இங்கு வருவாய் உயர்ந்தாலும், வரி விகிதம் உயர்வதில்லை. இவ்வரிமுறையில் உயர் வருமானம் ஈட்டுபவர்கள் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும் குறைவான தியாகத்தையே மேற்கொள்கின்றனர். இந்நான்கு முறைகளுள் வளர்வீத வரிவிதிப்பு முறையே சிறந்ததாகும்.
ஆண்டு நிதி நிலை அறிக்கை (Budget)அரசின் வரி வருவாய் மற்றும் பொது கடன்களைப் பற்றிய தீர்மானங்கள் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்படுகின்றன. வளர்ச்சிக்கும், திட்டம் தீட்டுதலுக்கும் வரவு செலவுத் திட்டமானது இன்றியமையாததாகும் வளர்ச்சித் திட்டங்களின் நோக்கங்களை அடைய திட்டவட்டமான கொள்கை வழிமுறைகளை இவ்வரவுச் செலவுத் திட்டம் வரைந்து தருகிறது. மேலும் வரவும் செலவும் ஒன்றிற்கொன்று இணையாக நடைபெறாததால் இந்த வரவு செலவுத் திட்டமானது அவசியமானதாக இருக்கிறது.
நிதியியல் கொள்கை (Fiscal Poliy)நிதியியல் கொள்கையின் பொருள் விளக்கம்
நிதியியல் கொள்கை என்பது அரசின் (பொதுச்) செலவு மற்றும் அதற்கான நிதி வழங்கும் முறையைப் பற்றிய தொகுப்பு கோட்பாடுகளை குறிப்பதாகும். ஒரு அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கைப் பற்றிய நிலையமைதியே நிதியியல் கொள்கை எனப்படும். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மாற்றி அமைக்கவும் அரசு என்ன செய்யக்கூடும் என்ற கேள்விக்கு விடையை நிதிக் கொள்கை அளிக்கிறது. நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் விலை ஆகியவற்றையும் பொதுக்கடன்கள், வரிகள், பொதுச் செலவுகள் வாயிலாக மாற்றி அமைக்க அரசு எடுத்துக் கொள்ளும் முயற்சிகளைப் பற்றியது ஆகும்.
வரையறைஆர்தர் ஸ்மித்ஸ் என்பவரின் கூற்றுப்படி “நிதியியல் கொள்கை என்பது நாட்டின் தேசிய வருவாய், உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஆகியவற்றில் தேவைப்படும் விளைவுகளை ஏற்படுத்தவும். தேவைப்படாத, எதிர்பாராத, விளைவுகளைத் தவிர்க்கவும் அரசு மேற்கொள்கின்ற அரசின் வருவாய் மற்றும் செலவு பற்றிய காரியத்திட்டமாகும்."
நிதியியல் கொள்கையின் முக்கியத்துவம்பேராசிரியர் J.M. கீன்சு அவர்கள் வெளியிட்ட "வேலை வாய்ப்பு வட்டி மற்றும் பணத்தை சார்ந்த பொதுக் கொள்கை" என்னும் நூல் வெளியிடப்படும் வரை நிதியியல் கொள்கையின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. அவரது பொதுக் கோட்பாடானது நிதியியல் கொள்கையின் பொருளையும் செயல்பாட்டையும் அறிவுறுத்தி பொது நிதியியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இவர் வரிகள், பொதுச் செலவுகள், பொதுக் கடன்களே நாட்டின் உற்பத்தி நிலையையும், வேலை நிலைகளையும் மாற்றுவதற்கான சிறந்த கருவிகள் என்று விளக்கியுரைத்தார்.
மக்களாட்சி வழியில் இயங்கும் அரசு மக்களது பொது நலத்தில் ஈடுபாடு கொண்டதாக நடந்து கொள்ள வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சித் துறைகளில் சீரியப் பணியாற்ற வேண்டும். அனேக பொதுநல வளர்ச்சிப் பணிகளில் (பொது பயன்பாட்டுப் பணிகளான குடிநீர் வசதி, சுகாதார வசதி, குடிமைப் பணிகள், துவக்கக் கல்வி, சமூக நலன், பாதுகாப்பு) முக்கிய பங்கேற்று செயல்பட வேண்டும். இதுவே நவீன அரசுகளின் தலையாய நிதியியல் கொள்கைகளாகும். மேற்கூறிய பணிகளும், சேவைகளும் அங்காடியில் விற்கப்படாதவைகளாகும். அவை நுகர்விற்காக அங்காடியில் அளிப்பாக விற்க முடியாதவைகளாகும். ஆனால் இத்தகைய பொதுப் பணிகளுக்காக வரிகளின் வடிவத்தில் இதன் பெறுமானத்தை அரசு பெற்றுக் கொள்ளலாம்.
வளர்ச்சி குறைந்த நாடுகளில் பொது நிதியியலானது இன்னும் கூடுதலான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வரசு பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகிளில் தீவிர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் என்பது விரும்பத்தக்கதொன்றாகும். எனவே பொது நிதியியலில் விரைந்த வளர்ச்சியையும் பொருளாதார நிலைப்படுத்துதலையும் வலியுறுத்தி அரசாங்கங்கள் பாடுபட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
நிதிக் கொள்கையின் அடிப்படையான நோக்கங்கள் பின்வருமாறு
1. வளங்களைத் திரட்டி, பொதுத் துறையின் நிதி ஆதாரங்களைப் பெருக்கச் செய்தல்
2. தனியார் துறையை வளர்ச்சியடையச் செய்தல்
3. வளங்களை உத்தம அளவில் (Optimum) பயன்படுத்தல்.
4. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல்
5. வருமானம், சொத்துப் பகிர்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல்.
6. முழு வேலை வாய்ப்பை அடைதல், மற்றும் பொருளாதார வளர்ச்சி
7. நிதிக் கொள்கையும், மூலதன ஆக்கமும்
நிதிக் கொள்கையானது, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை அதிகரிக்க முடுக்கிவிடும் முக்கிய கருவியாக இருந்தாலும், இதில் கீழ்க்காணும் குறைபாடுகள் உள்ளன.
1. நிதித் தீர்வுகளின் அளவு
2. வணிகச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையின் குறைந்த வெற்றி.
3. அரசு நிருவாகத்தில் காலதாமதம்
4. மற்ற குறைபாடுகள்
நிதிநிலை அறிக்கை என்பது ஒரு சாதாரண வரவு செலவு அறிக்கை மட்டுமல்ல அது ஒரு பொருளாதாரத்தின் வடிவமைப்பாகும். இவ்வரைவு நாட்டு வருமானத்தின் ஒரு சிறிய பகுதியாக இருப்பதனால் பொருளாதார வளர்ச்சியின் மீது விரும்பத்தக்க பாதிப்பை ஏற்படுத்த இயலாது. நம் நாட்டின் பெருமளவிலான மக்கள் ஏழைகளாக இருப்பதால், நேர்முக வரியை அதிக அளவில் நாம் பயன்படுத்த இயலவில்லை. மேலும் மொத்த வரி வருவாயானது நாட்டு வருமானத்தில் ஒரு சிறு பகுதியாக இருப்பதினால், பெருமளவு நிதியாக்கம் தேவைப்படுகின்றது, பின் தங்கிய நிலையில் இருக்கின்ற பொருளாதாரத்தை முன்னேற்ற, இந்நிதியின் தீர்வு போதாததாக உள்ளது.
2. வணிகச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையின் குறைவான வெற்றிஒரு நாட்டின் துறைகளிக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படாவிட்டால், நிதி கொள்கையின் கருவிகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்த முடியாது. அரசு மேற்கொள்ளும் எல்லா செயல்பாடுகளும் அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி, இவ்வாறாக ஒரு துறையில் ஏற்படுகின்ற மந்தமானது மற்றொரு துறையில் விலை ஏற்றத்தை எற்படுத்தும். பற்றாக்குறை நிதியாக்கத்தின் மூலம் எற்பட்ட வாங்கும் சக்தியின் அதிகரிப்பு, 1930ம் ஆண்டின் பெரும் மந்தத்தை பற்றி விளக்கிய J.M. கீன்சு அவர்களின், மந்தம் தழுவிய பொருளாதாரங்களுக்கு இன்னும் கூடுதலான விலை ஏற்றத்தையே அளித்தது.
3. அரசு நிருவாகத்தில் காலதாமதம்நிர்வாகத் தடைகளினால் நிதிநிர்வாக கொள்கை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதமும், நிச்சயமற்ற சூழல் மற்றும் குழப்ப நிலையும் ஏற்படக்கூடும். இதன் விளைவாக நிதிக் கொள்கையின் வலிமை செயலிழக்கக்கூடும்.
மற்ற குறைபாடுகள்பெரும் அளவிலான வேலைக்குறைவு, பொதுமக்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, வரி ஏய்ப்புகள், குறைவான வரி விதிப்புக்கள் போன்றவை நிதிக் கொள்கையின் மற்ற குறைபாடுகளாகும்.
- ஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
- திட்டக்குழு, நிதிக்குழு மற்றும் நிதிஆயோக்
- வருவாய் ஆதாரங்கள் -இந்திய ரிசர்வ் வங்கி
- நிதி கொள்கை
- பணக் கொள்கை
- நிதி ஆணையம்
- மத்திய மாநில அரசுகள் இடையேயான நிதி பகிர்வு
- பொருட்கள் மற்றும் சேவை வரி(GST)
- நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
- வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு
- கிராம நலன் சார்ந்த திட்டங்கள்
- தொழில் வளர்ச்சி
- சமூகம் சார்ந்த பிரச்சினைகள்
- இந்திய பொருளாதாரம்