ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்
- சென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- இதன்படி, ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும்; சென்னை சென்டிரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ” என்றும்; புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஓபிசி கிரீமி லேயர்
- இதர பிற்படுத்தப்பட்டோரில் மேல்நிலையினருக்கு (ஓபிசி கிரீமி லேயர்) இடஒதுக்கீடு வழங்க, அவர்களது வருமான வரம்பை ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
- சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இப்பிரிவில் வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்து உருவானதன் அடிப்படையில் 1971-இல் சதானந்தன் ஆணையம் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அப்போது பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளவர்களை மேல்நிலையினராக (கிரீமி லேயர்) வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதில்லை என்று ஆணையம் பரிந்துரைத்தது.
- அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் 1993-இல் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வருமானம் உள்ள இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. இந்த வருமான வரம்பு 2013-இல் ரூ. 6 லட்சமாகவும், 2017-இல் ரூ. 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
- இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய, பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரையில், ஓபிசி கிரீமிலேயர் பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும். இந்த வருமானத்தைக் கணக்கிடும்போது விவசாய வருமானத்தையும் மாத சம்பளத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது.
வால்மீகி சமுதாயத்தினருக்கு - குடியுரிமை சான்றிதழ்
- ஜம்மு - காஷ்மீரில் வசித்து வரும் வால்மீகி சமுதாயத்தினருக்கு, 63 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 1957 இல் ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக பக்ஷி குலாம் முகம்மது பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜம்மு நகரில் சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்ற பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து வால்மீகி சமுதாயத்தினர் வரவழைக்கப்பட்டனர்.இங்கு அவர்களுக்கு வாக்குரிமை, உயர்கல்வி, கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை.
- எனவே, தங்களுக்கு ஜம்மு - காஷ்மீரில் குடியேற்றச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே அவர்கள் போராடி வந்தனர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம், அவர்களது கோரிக்கை குறித்த பரிசீலனை செய்து அவர்களுக்கு குடியேற்றச் சான்றிதழ் வழங்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, வால்மீகி சமாஜ் பஸ்டி அமைப்பைச் சேர்ந்த 71 வயது தீபு தேவிக்கு முதலாவதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் ஜம்மு மாநகராட்சி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
Young Population of India
- இந்தியாவில் இளையோர் மக்கள் தொகை (Young Population of India) விவரத்தை மத்திய பதிவாளர் ஜெனரல் (Registrar General ) மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் (Census Commissioner of India) அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் மாதிரி பதிவு விவரங்களின் (Sample Registration System (SRS) 2018 report.) ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த தரவுகளின் படி, முதல் முறையாக , இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிப்போரில் பாதிக்கும் மேல் 25 வயது அல்லது அதற்கு மேலானோராக உள்ளனர்.
- தேசிய அளவில், ஒட்டு மொத்தமாக 46.9% மக்கள் தொகை 25 வயதிற்கு கீழ் உள்ளனர். இவர்களில், 47.4% ஆண்களும், 46.3% பெண்களும் 25 வயதிற்குட்பட்டோராக உள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரையில், பீகார் மாநிலத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையில் (57.2%) 25 வயதிற்குட்பட்ட நபர்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 52.7% , 25 வயதிற்குட்பட்டோருடன் உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலுள்ளது.
பெய்டோவ்-3 (BeiDou-3)
- பெய்டோவ்-3 (BeiDou-3) எனும் உலக புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பு (Navigation Satellite System) முற்றிலுமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு சீனாவிலேயே சொந்தமாக ஆய்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
- தற்போது வரை, இந்த அமைப்புடனான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் 137 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவின் ஜி.பி.எஸ், ரஷியாவின் குளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ ஆகியவற்றோடு சீனாவின் பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு முறையும் சேர்ந்து உலகின் 4 முக்கிய புவியிடங்காட்டி அமைப்புகளாக திகழ்கின்றன.