பார்முலா 1 கார்பந்தயம்
- கொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த பார்முலா1 கார்பந்தயம் நேற்று தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் ரசகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்த இந்த போட்டியில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீட்டர் இலக்கை 1 மணி 30 நிமிடம் 55.739 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது.
ஐ.சி.எப். 4200 ரயில் பெட்டிகள்
- சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதாவது இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா, நைஜீரியா உட்பட 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'ரயில் - 18' திட்டத்தில் 'வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு ஐ.சி.எப்.பில் நவீன தொழில் நுட்பத்தில் உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐ.சி.எப். தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 2017 -- 18ல் 2503 பெட்டிகள்; 2018 -19ல் 3650 பெட்டிகள்; 2019 --20ல் 4200 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.இவ்வாண்டு முதல் முறையாக நேபாளத்துக்கு டீசலில் இயங்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.அதிவேக 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகளை மேலும் தயாரிக்க ஐ.சி.எப். ரயில்வே வாரியத்தின் அனுமதியை எதிர்பார்த்துள்ளது.
ராஜஸ்தானில் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
- 'கொரோனா நோய் தொற்று பரவுதல் அச்சம் காரணமாக மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை ரத்து செய்வது என ராஜஸ்தான்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுகின்றனர். அடுத்த சில நாட்களில் கல்வி துறை அமைச்சகம் வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்
- சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் 'மது பாபு பென்ஷன் யோஜனா' ஓய்வூதிய திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்பதாக ஒடிசா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இதில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அவர்களின் வயதுக்கேற்ப ரூ.500 முதல் ரூ.900 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று மாநில அமைச்சர் அசோக் பாண்டா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 6000 திருநங்கைகள் பயன்பெருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. இதற்கு தேவையான நிதியுதவி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வூதியத்தை பெற விரும்பும் திருநங்கைகள் MBPY அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் ஓராண்டுக்கு நீட்டிப்பு
- இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று விதிமுறைகளை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.
தமிழி எழுத்து கல்தூண் கண்டெடுப்பு
- மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.