131 சீருடை பணியாளர்களுக்கு 'அண்ணா' பதக்கம்
- தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல் ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதைப் பாராட்டும் வகையிலும், ஆண்டுதோறும் செப்.15-ம் தேதிஅண்ணா பிறந்த தினத்தில் முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு காவல் துறையில் கண்காணிப்பாளர் முதல்,முதல்நிலை காவலர் வரையிலான 100 அதிகாரிகள், பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
- சிறைத் துறையில் உதவி சிறைஅலுவலர் முதல் முதல்நிலைக் காவலர் வரை 10 அதிகாரிகள், பணியாளர்கள், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படைவீரர் வரையிலான 5 அதிகாரிகள், பணியாளர்கள், விரல் ரேகைப்பிரிவில் 2 துணை கண்காணிப்பாளர்கள், தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர் என 2 பேருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- பதக்கங்கள் பெறுவோருக்கு அவர்கள் பதவிக்கேற்ப பதக்க விதிகள்படி வெண்கலப் பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகை வழங்கப்படும்.
- மேலும், தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், கடந்த ஆக. 15-ம் தேதி திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி உயர்நிலை தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற எஸ்.கணேசனை, காப்பாற்றியதற்காக வழங்கப்படுகிறது.
- அம்மாவட்டத்தில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த நிலைய அதிகாரிஎஸ்.வீரராஜ், முன்னணி தீயணைப்பு வீரர் எஸ்.செல்வம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
UNCSW
- பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ஈகோசாக்) அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் (UNCSW) உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- 2021 முதல் 2025 வரை இந்தியா நான்கு ஆண்டுகள் UNCSW உறுப்பினராக இருக்கும். இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதற்கான தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் சீனாவால் பாதி ஓட்டுகளைக் கூட பெற முடியவில்லை.
- முன்னதாக, ஜூன் 18, 2020 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு (யு.என்.எஸ்.சி) நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு 128 ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.
ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் தேர்வு
- ராஜ்யசபாவின் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயணன் சிங்கின், எம்.பி., பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, துணைத் தலைவர் பதவி காலியானது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
- மீண்டும், எம்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள ஹரிவன்ஷ், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
- அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சார்பில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, மனோஜ் ஜா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நேற்று நடந்த தேர்தலில், ஹரிவன்ஷ் மீண்டும் வெற்றி பெற்றதாக, அறிவிக்கப்பட்டது.
கீழடி 6ம் கட்ட அகழாய்வு
- கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கருப்பையா என்பவரின் இரண்டுஏக்கர் நிலத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே 18 குழிகள் தோண்டப்பட்டு உலைகலன், விலங்கின் எலும்பு, எடை கற்கள், பாசிகள், தரை தளம், இணைப்பு பானைகள் கண்டறியப்பட்டன.
- மேலும் இரு குழிகள் தோண்டும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இதில் ஒரு குழியில் இரண்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
- 6ம் கட்ட அகழாய்வில்கீழடியில் இதுவரை உறைகிணறு எதுவும் தென்படாத நிலையில் அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்த உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
- தாமிர பொருட்கள் கண்டெடுப்புகீழடி 6ம் கட்ட அகழாய்வில் தாமிரத்தால்செய்யப்பட்ட காசுகள்,வளையல்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடி, அகரம், கொந்தகை, மணலுாரில்6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- இதில் மணலுாரில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நடந்த பணிகளில் உலைகலன், பானை ஓடுகள் உள்ளிட்டவைகள்ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில் தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்து உள்ளன.
- இரும்பு காலம் என அறியப்பட்ட காலத்தில் இவற்றின் பயன்பாடு இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது. தாமிரத்தால் செய்யப்பட்ட மோதிரம், வளையல் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
- பண்டைய காலத்தில் இரும்பின் பயன்பாடு இருந்த நிலையில் அத்துடன் இணைந்து தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமர் - யோஷிஹிடே சுகா
- ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மூவரும் போட்டியிட்டனர்.
- அந்நாட்டு பார்லி.,யின் மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டளித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹிடே சுகா பெரும் வெற்றி பெற்றார்.
- சிகரு இஷிபா 68 ஓட்டுகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 ஓட்டுகளும் பெற்றனர். 71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு ஜப்பானைச் சேர்ந்த ஸ்டராபெர்ரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார்.
- மேலும் இவர், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம் என்பதால் யோஷிஹிடே சுகா அடுத்தாண்டு செப்.,மாதம் வரை பதவி வகிப்பார்.
தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர்
- தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்.
- இந்தியாவைச் சேர்ந்த, சந்தீப் சிங் தலிவால், சிறு வயதிலேயே, பெற்றோருடன் அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் குடியேறினார்.
- வளர்ந்து வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், 2009ல், சமூகப் பணியாற்றும் நோக்கில், ஹாரிஸ் நகர போலீசில் சேர்ந்தார்.கடந்த, 2019, செப்., 27ல், பணியில் இருந்த போது, ஒரு காரை நிறுத்தி விசாரிக்க முயன்றார். அப்போது, காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், சந்தீப் சிங் தலிவால் உயிரிழந்தார்.
- இதையடுத்து, அமெரிக்க - சீக்கிய சமூக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்ட, சந்தீப் சிங் தலிவாலை கவுரவிக்க வேண்டும் என்ற தீர்மானம், கடந்த ஆண்டு, அமெரிக்க பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.
- அதன்படி, சந்தீப் சிங் தலிவால் பெயரை, ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சூட்டும் மசோதா, அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- செனட் சபை ஒப்புதலுக்குப் பின், 'டெபுடி சந்தீப் சிங் தலிவால் போஸ்ட் ஆபிஸ் சட்டம்' அமலுக்கு வரும்.
- அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், மேற்பார்வை போலீஸ் பிரிவின் முதல் சீக்கியர்; பணியில் தாடி, தலைப்பாகை அணிய அனுமதி பெற்ற முதல் சீக்கியர் என்ற சிறப்புகளை பெற்றவர், சந்தீப் சிங் தலிவால். தற்போது, தபால் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்ட, இரண்டாவது, இந்திய - அமெரிக்கர் என்ற சிறப்பும் கிடைத்து உள்ளது.
- கடந்த, 2006ல், முதன் முறையாக, இதுபோன்ற சிறப்பு, தெற்கு கலிபோர்னியா எம்.பி., தலிப் சிங் சாந்துக்கு கிடைத்தது.